முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த வாகன அணி மீது தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்துவதற்கு முயற்சித்த குண்டுதாரிக்கு உதவியதாக குற்றச்சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரு குற்றவாளிகள் தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி முன்வைத்துள்ள வேண்டுகோளை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (28) நிராகரித்துள்ளது.

2008 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேன அப்போது அமைச்சராக பதவி வகித்தபோது மேற்படி தாக்குதலை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த 15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிருபாகரன் என்றழைக்கப்படும் மொரிஸ் மற்றும் தம்பையா பிரகாஷ் ஆகியோர் சார்பாக அவர்களது சட்டத்தரணிகள் மேற்படி பிணை கோரிக்கையை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளனர். இந்த சந்தேகநபர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், அவர்களை பிணையில் விடுவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக சட்டமா அதிபர் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த அரச சார்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.