நான் அமைச்சரவையில் இருந்திருக்காவிட்டால் 2024ஆம் ஆண்டிலும் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றிருக்காது. அது தொடர்பான தகவல்களை பிரிதொரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துவேன். நாட்டுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட எந்த பிரேரணைக்கும் நான் பங்காளியாகவில்லை. அதனாலே பலதடவைகள் அமைச்சரவையில் இருந்து ஒதுக்கப்பட்டேன். மஹிந்த ராஜபக்ஷ் பூமியை முத்தமிட்டு நாட்டை அழித்துவிட்டார். நான் அதிகாரத்துக்கு வந்தால் நாட்டு வளங்களில் ஒரு சதமேனும் விற்பனை செய்வதற்கு இடமளிக்கமாட்டேன் என்ற உறுதியை வழங்குகிறேன் என தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.
எமக்கு ஒரு நாடு எனும் தொனிப்பொருளில் ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் விஜேதாச ராஜபக்ஷ்வின் வெற்றிப்பயணத்துக்கான ஆசிர்வாத கூட்டம் வியாழக்கிழமை (1) இலங்கைமன்ற கல்லூரியில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அனைத்து இன தலைவர்களும் ஒன்றுபட்டு ஆங்கிலயர்களிடமிருந்து சுதந்திரத்தை பெற்றுக்கொண்ட எமது நாடு 1978ஆம் ஆண்டுக்கு பின்னர் அரசியல்வாதிகளின் மோசடிகள் காரணமாக நாடு வங்குராேத்தடைந்தது. இந்த நிலைக்கு அரசியல்வாதிகளே காரணமாகும். அரசியல்வாதிகள் எப்போதும் நாட்டை நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பதிலாக தங்களை பலப்படுத்திக்கொள்ளவே நடவடிக்கை எடுத்தார்கள். அதன் பலனாகவே நாடு வங்குராேத்து நிலைக்கு சென்றது.
வாடு வங்குராேத்து அடைந்தபோது நாட்டை பொறுப்பேற்க யாரும் முன்வராத நிலையில் நாங்கள் முன்வந்து. எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நான் சரியாக செய்தேன். குறுகிய காலத்தில் 90க்கும் மேற்பட்ட புதிய சட்டங்களை ஏற்படுத்தியிருக்கிறோம். இந்த சட்டங்களை கொண்டுவரும்போது சில சந்தர்ப்பங்களில் ஆளும் கட்சிக்குள் எதிர்ப்பு வந்தது. இன்னும் சில சந்தர்ப்பங்களில் எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. ஒருசில சந்தர்ப்பத்தில் ஆளும் எதிர்க்கட்சி இரண்டு தரப்பும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. என்றாலும் நாட்டுக்கு தேவையான சட்டங்களை கொண்டுவர நான் ஒருபோதும் பின்வாங்காமல் அனைத்து சட்டங்களையும் பாராளுமன்றத்தில் அனுமதித்துக்கொண்டேன்.
அத்துடன் பாராளுமன்றத்துக்கு மேலாக செனட் சபை ஒன்றை ஏற்படுத்தும் பிரேரணை ஒன்றை இறுதியாக அமைச்சரவைக்கு சமர்ப்பித்து அதற்கு அமைச்சரை அனுமதியும் கிடைக்கப்பெற்றிருக்கிறது. என்றாலும் தேர்தல் காரணமாக அதனை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க முடியாத நிலை இருக்கிறது. புதிய பாராளுமன்றத்தில் முதலாவது பாராளுமன்ற அமர்வில் இந்த பிரேரணையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பேன். செனட் சபை மூலம் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கமுடியும். பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் நாட்டுக்கு பொருத்தமில்லா சட்டங்களை இதன் மூலம் மாற்றியமைக்க முடியும்.
மேலும் நல்லாட்சி அரசாங்கத்தை நாங்கள் பல எதிர்ப்பார்ப்புடனே அமைத்தோம். என்றாலும் நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை பத்திரம், மத்திய வங்கி ஆளுநராக அர்ஜுன் மஹேத்திரனை நியமிக்க வேண்டும் என்பதாகும். இதற்கு நான் கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். என்றாலும் அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க, அர்ஜுன் மஹேந்தின் இல்லாமல் நாட்டை கொண்டுசெல்ல முடியாது என்றார். இறுதியில் மத்திய வங்கியை கொள்ளையடித்து நாட்டைவிட்டு அவர் சென்றுவிட்டார். அர்ஜுன் மஹேந்திரனை நாட்டுக்கு அழைத்துவருவதாக ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் உறுதியளித்தார். ஆனால் இதுவரை அதனை அவரால் செய்ய முடியாமல் போயிருக்கிறது.
அதேபோன்று இந்த நாட்டில் பாரிய இரத்தக்களறி ஏற்படும் அபாயம் இருப்பதாக நான் 2016இல் தெரிவித்தபோது, நான் இனவாதத்தை தூண்டுவதாக தெரிவித்து, அப்போது இருந்த அமைச்சரவையில் இருந்து என்னை நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்தார்கள்.அன்று நான் தெரிவித்த கருத்தை மதித்து செயற்பட்டிருந்தால், ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றிருக்காது. அன்று மரணித்த அனைவரும் உயிருடன் இருந்திருப்பார்கள். நான் அமைச்சரவையில் இருந்துகொண்டு உண்மையை தெரிவித்ததாலே பல தடவைகள் அமைச்சரவையில் இருந்தும் நீக்கப்பட்டும். வெளியேறியும் உள்ளேன்.
தற்போதும் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதியதொரு மாற்றத்தை ஏற்படுத்தவே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்தேன். நாட்டின் வளங்களை விற்பனை செய்வதே தற்போதுள்ள ஆட்சியாளர்களின் பணியாக இருந்து வருகிறது. நான் ஆட்சிக்குவந்தால் நாட்டு வளங்களில் ஒரு சதமேனும் விற்பனைசெய்ய இடமளிக்கமாட்டேன் என்ற உறுதியை வழங்குகிறேன். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த கெளரவம் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு இருக்கிறது.
அதற்காக 2010ல் அவருக்கு மக்கள் ஆணை வளங்கியது நாட்டை கொள்ளை அடிப்பதற்கு அல்ல. அவர் தனது நெஞ்சில் அடித்துக்கொண்டு முதலாவது தடவையும் இரண்டாம் தடவையும் மூன்றாம் தடவையும் தாய் நாடு என பூமியை முத்தமிட்டுக்கொண்டு நாட்டை அழித்துவிட்டார் என்றார்.