பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என ஜனாதிபதி தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினர் உறுதியளித்திருந்தனர் ஆனால் பொருட்களின் விலை தற்போது அதிகரித்துள்ளன என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் (Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.
கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் நேற்று (28)இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ” நாம் ஜனாதிபதியை விமர்சிக்கவில்லை. இன்னும் பொருளாதார நெருக்கடி உள்ளது. மக்களும் சற்று பொறுமை காக்க வேண்டும். ஆட்சி மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை சந்திக்க வேண்டும்.
எரிபொருள் விலை கூட கணிசமான அளவு குறையும் என கூறியிருந்தனர். ஆனால் ஓரளவுதான் குறைந்துள்ளது. எமது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எரிபொருள் விலை சூத்திரத்துக்கமையவே செயற்பட வேண்டியுள்ளது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் சிலர் இன்று கேள்வி எழுப்புகின்றனர்.
அடிப்படை நாள் சம்பளமாக ஆயிரத்து 350 ரூபாவும், ஊக்குவிப்பு தொகையாக 350 ரூபாவையும் பெற்றுதருவோம் என நாம் உறுதியளித்தோம். அதற்கான வர்த்தமானியும் வெளியானது. தூரநோக்கு சிந்தனை அடிப்படையில் நாம் கடந்த ஆட்சியின்போது அடிப்படை சமபளம் ஆயிரத்து 350 ரூபாவுக்கு இணங்கி இருக்காவிட்டால் இன்று அந்த அதிகரிப்புகூட கிடைக்கப்பெற்றிருக்காது.
எஞ்சிய தொகையை பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிகளை முன்னெடுப்போம். தேசிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கமானது, தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தது.