கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவியுடை நீண்ட காலத்துக்கு முன்னரே களையப்பட்டிருக்க வேண்டும் என்று ராஜாங்கனே சத்தாரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரின் காவியுடை சிறைச்சாலைக்குள் களையப்பட்டது தொடர்பில் கருத்து வெளியிடும்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஞானசார தேரருக்கு மீண்டும் காவியுடை அணிவிக்க பௌத்த தேரர்களில் சிலர் இன்று பாதயாத்திரை தொடங்கியுள்ளனர்.
ஆனால் பௌத்த தர்மத்தின் படி பராஜிகா எனப்படும் காவியுடை களையப்படுவதற்கான தீய காரியங்கள் பலவற்றைச் செய்தவர் தான் இந்த ஞானசார தேரர் ஆவார்.
ஒரு தடவை அவர் குடித்துவிட்டு மதுபோதையில் வாகனம் செலுத்தி நீதிமன்றத்தில் அபராதம் செலுத்தியுள்ளார். அவருக்கு ஒரு மனைவி மற்றும் மகள் ஆகியோர் பிரான்சில் இருக்கின்றார்கள். ஆக காவியுடை களையப்படுவதற்கு இவ்வாறான தீய செயல்களே போதுமானது.
அப்போதெல்லாம் இந்த மகாநாயக்கர்களும், ஏனைய தேரர்களும் எங்கிருந்தார்கள்? மகாநாயக்கர்கள் மற்றும் மகாசங்கத்தினர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டுதான் ஜே.ஆர் ஜயவர்த்தனவுக்கு முன்பிருந்தவர்கள், அவருக்குப் பின் வந்த பிரேமதாச, சந்திரிக்கா, மகிந்த, மைத்திரி மற்றும் ரணில் எல்லோரும் இந்த நாட்டை ஆட்சி செய்தார்கள்.
என்ன நடந்தது? நாடு அபிவிருத்தி அடைந்ததா? இல்லவே இல்லை அதற்குப் பதிலாக கடந்த காலங்களில் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களுக்கும் வரிசையில் காத்திருக்கும் அவல நிலைதான் பொதுமக்களுக்கு ஏற்பட்டது.
அப்போதெல்லாம் இந்த தேரர்களில் யாரும் பொதுமக்களுக்காக வீதிக்கு இறங்கவில்லை. இந்த அரசாங்கம் நாட்டை முன்னேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.
இன்னும் கொஞ்ச காலம் அவர்களுக்கு வாய்ப்பளித்து பொறுமையாக இருந்தால் இந்த நாடு அபிவிருத்தியைப் பெறும் என்றும் சத்தாரத்ன தேரர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
