ஹோர்முஸ் நீரிணை மற்றும் ஓமன் கடற்கரை ஆகிய கடற்பரப்பு பகுதிகளில் இரண்டு கப்பல்கள் மீது நடத்தப்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களில் சிக்கி இந்திய மாலுமிகள் இருவர் காணாமற்போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த இரு கப்பல்களிலும் தலா 11 இந்திய மாலுமிகள் பயணித்துள்ள நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) இக்கப்பல்கள் மீது இரு வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
ஓமன் கடற்கரைக்கு அருகில் சோஹார் துறைமுகப் பகுதியில் நங்கூரமிடப்பட்டிருந்த எம்.டி.பெட்ரோ டொல்பின் என்ற எண்ணெய்க் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தக் கப்பலில் இந்திய மாலுமிகள் 11 பேர் இருந்ததாகவும் அவர்களில் 9 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் 2 பேர் காணாமற்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை ஹோர்முஸ் நீரிணை அருகில் எம்.டி.வால்தெரா என்ற மற்றுமொரு வணிகக் கப்பல் மீது ஏவுகணை தாக்கியதில் கப்பலில் தீ பரவியதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தக் கப்பலில் இருந்த 11 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குறித்த இரு கப்பல்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச கடல் மார்க்கங்களில் கப்பல்கள் சுதந்திரமாக பயணிப்பதையும் கடல்சார் வர்த்தகம் எவ்வித தடையின்றி மேற்கொள்ளப்படுவதையும் சர்வதேச சட்டங்களின்படி உறுதிப்படுத்தவேண்டும் என்றும் கடல் வழியே பயணிக்கும் வணிகக் கப்பல்கள், அதனூடாக செல்லும் மாலுமிகள், பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும். இதுபோன்ற தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
