இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை இரத்துச் செய்யும் சவூதி அரேபிய உச்ச நீதிமன்றத்தின் தீர்மானத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வரவேற்றுள்ளார்.
இந்தத் தீர்மானம் சிவராசா அனோஜன், அவரது குடும்பத்தினர் மற்றும் இந்த வழக்கின் முன்னேற்றம் குறித்து மிகுந்த கவலையுடன் அவதானித்து வந்த இலங்கையர்களுக்குப் பெரும் நிம்மதியை அளித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நிதானமான இராஜதந்திர நடவடிக்கைகள், நட்பு நாடொன்றின் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளித்தல் மற்றும் வெளிநாட்டில் உள்ள இலங்கைப் பிரஜைக்கு ஆதரவளித்தவர்களின் முயற்சிகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்தத் தீர்மானம் வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சவூதி அரேபிய அரசாங்கத்துக்கு நன்றியைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, இந்த விவகாரத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இரு நாடுகளினதும் இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள் மற்றும் சட்டத்தரணிகள் குழுவினருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
எஞ்சியுள்ள சட்ட நடைமுறைகள் நிறைவடையும் வரை அனோஜனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் தொடர்ந்து வழங்கும் என்றும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
“வாழ்வாதாரத்தைத் தேடி நாட்டை விட்டுச் செல்லும் எந்தவொரு இலங்கையரும் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளதாக ஒருபோதும் உணரக்கூடாது” என ஜனாதிபதி தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
