இலங்கைக்கு அண்மித்து நிலவிய தாழ் வளிமண்டலத் தளம்பல் நிலை, தற்போது குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும், நாட்டைச் சூழவுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளிலும் இன்றைய தினம் மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அதற்கமைய மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இடையிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
அத்துடன் மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், விநாடிக்கு 8,400 கன அடி நீர் தெதுரு ஓயாவில் இருந்து வெளியேற்றப்படுவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, தெதுரு ஓயாவின் இருமருங்கிலும் தாழ்நிலப் பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
