கேகாலை, வறக்காப்பொல பகுதியில் கிணற்றில் விழுந்த தனது செல்லப் பூனையை மீட்க முயன்ற 32 வயதுடைய இளம் பெண் ஒருவர், எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
வறக்காப்பொல, பகுதியைச் சேர்ந்த கே. பி. தினேத்ரி இமேஷிகா உதானி (32) என்ற திருமணமாகாத பெண்ணே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவர் நிட்டம்புவ, களகெடிஹேன பகுதியில் அமைந்துள்ள கையுறை தயாரிப்பு நிறுவனமொன்றில் ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார்.

கடந்த 20 ஆம் திகதி இரவு 10 மணியளவில், வீட்டில் வளர்க்கும் பூனை கிணற்றுக்குள் விழுந்த சத்தம் கேட்டுள்ளது. உடனே அப்பெண் தனது தந்தையுடன் இணைந்து கிணற்றடிக்குச் சென்றுள்ளார். தரைமட்டத்திலிருந்து சுமார் 3 அடி உயரத்தில் பாதுகாப்புச் சுவர் இருந்தபோதிலும், இரவு நேரம் என்பதால் கைத்தொலைபேசியின் டோர்ச் லைட்டை ஒளிரவிட்டு கிணற்றின் உட்பகுதியை அவர் பரிசோதித்துள்ளார்.
பூனை கிணற்றுக்குள் இருப்பதை உறுதிசெய்து, அதை வெளியே எடுக்க முயன்றபோது, அப்பெண் திடீரென நிலைதடுமாறி கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். உடனடியாகச் செயற்பட்ட உறவினர்கள் அவரை கிணற்றிலிருந்து மீட்டு, நிட்டம்புவ வதுபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.கிணற்றுக்குள் விழும்போது கொங்கிரீட் சுவரில் தலை பலமாக மோதியதால் ஏற்பட்ட கடுமையான காயமே மரணத்திற்குக் காரணம் எனக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வறக்காப்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
