கண்டி – மாத்தளை பிரதான வீதியின் அக்குரணை 7ஆம் கட்டைப் பகுதியில் இன்று (19) திங்கட்கிழமை இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

சீமெந்து மூட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, நான்கு முச்சக்கர வண்டிகள், இரண்டு லொறிகள் மற்றும் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மீது மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் வாகனங்களில் பயணித்தவர்கள் மாத்திரமன்றி, வீதியில் சென்றுகொண்டிருந்த பாதசாரிகளும் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் ஒரு பெண் மற்றும் மூன்று ஆண்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 8 பேர் உடனடியாக மீட்கப்பட்டு அக்குரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
