ஈரானியக் கப்பல்களுக்கு உதவி: அமெரிக்கத் தடைகள் அச்சத்தால் தீர்க்கமான முடிவை எடுக்க முடியாத சூழலில் இலங்கை!

இலங்கையின் கடற்பரப்பிற்கு அப்பால், சர்வதேசக் கடற்பரப்பில் நங்கூரமிட்டுள்ள 19 ஈரானிய எண்ணெய் விநியோகக் கப்பல்களுக்கு உணவு, குடிநீர் மற்றும் எரிபொருள் விநியோகிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இதுவரை இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

எந்தவொரு உதவியையும் வழங்குவதற்கு முன்னர், இலங்கை தனது தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்தக் கப்பல்களுக்குச் சேவைகளை வழங்கும் உள்நாட்டு நிறுவனங்கள் அமெரிக்காவின் இரண்டாம் நிலைப் பொருளாதாரத் தடைகளை (Secondary Sanctions) எதிர்கொள்ள நேரிடலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானியக் கப்பல்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவதைத் தவிர்க்குமாறு இலங்கை கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிகாரிகள் அழுத்தம் கொடுத்துள்ளதாக வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் (The Wall Street Journal) செய்தி வெளியிட்டிருந்தது.

எனினும், அமெரிக்காவிடமிருந்து நேரடியாகத் தடை அச்சுறுத்தல்கள் எதுவும் வரவில்லை என இலங்கையின் வெளிவிவகார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

இலங்கையின் பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ), ஆனால் 12 கடல்மைல் எல்லைக்கு வெளியே, சுமார் 47 வெளிநாட்டுக் கப்பல்கள் நங்கூரமிட்டுள்ளன.

அவற்றில் 19 கப்பல்கள் ஈரானியக் கொடியுடன் பயணிப்பவை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 2025ஆம் ஆண்டு தரவுகளின்படி, இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 24 சதவீதம் அமெரிக்கச் சந்தையைச் சார்ந்துள்ளது.

இதனால், அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளானால் இலங்கையின் வர்த்தகமும் பொருளாதாரமும் பெருமளவில் பாதிக்கப்படலாம் எனப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் கடல்சார் சட்ட உடன்படிக்கையின் (UNCLOS) 98ஆவது பிரிவின்படி, கடலில் ஆபத்தில் சிக்கியவர்களுக்கு உதவ வேண்டிய பொறுப்பு நாடுகளுக்கு உள்ளது.

இந்தக் கப்பல்கள் போர்க்கப்பல்கள் அல்ல; மாறாக, சரக்குக் கப்பல்கள் என்பதால், அவற்றிலுள்ள மாலுமிகளுக்கு உதவ வேண்டிய மனிதாபிமானப் பொறுப்பு இலங்கைக்கு இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி தயான் ஜயதிலக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை, ஈரானியக் கப்பல்களுக்கு உதவினால் அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ள வேண்டிய அபாயமும், உதவாவிட்டால் கடலில் உள்ள மாலுமிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழலும் உருவாகியுள்ளன. இதனால், இலங்கையின் வெளியுறவுக் கொள்கையும் சுயாதீனமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையும் பெரும் சோதனைக்கு உள்ளாகியுள்ளன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

JaffnaDevelopment
யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திக்கு 10,800 மில்லியன் ரூபா! ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் அறிவிப்பு
YoshithaRajapaksa
யோஷித ராஜபக்ஷவிற்கு கடற்படையில் சம்பளமாக 51 லட்சத்திற்கும் மேல் வழங்கப்பட்டது: கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வெளிப்பாடு!
TempleRobbery
அம்மன் கோவில் பூட்டை உடைத்து பணம், விகாரையில் சூடாமணிகள் திருட்டு: கலஹாவில் பரபரப்பு!
ShiranthiRajapaksa
ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை: விசேட மருத்துவக் குழு இன்று அறிக்கை சமர்ப்பிக்கிறது
GalagodaAththeGnanasaraThero
ஞானசார தேரர் ஆதரவாளர் மீது தாக்குதலா? சமூக வலைத்தள வீடியோவுக்கு பொலிஸார் முற்றுப்புள்ளி
SivarasaAnojan
அனோஜனின் விடுதலைப் பயணம்: அரச ஆதரவு தொடரும் என ஜனாதிபதி எக்ஸ் தளத்தில் பதிவு!