முன்னாள் முதற் பெண்மணி ஷிரந்தி ராஜபக்சவுக்கு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப்பிரிவில், அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

ஷிரந்தி ராஜபக்சவிற்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, சிறையில் இருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஷிரந்தி ராஜபக்ச நேற்று (12) கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய அறுவை சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், அவர் தற்போது திறந்த இதய அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்போது அரச தரப்புக்காக முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ், சந்தேகநபர் நேற்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது உண்மை தான் என்றாலும், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுவது குறித்து சிறை அதிகாரிகளுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.
அதன்படி, நீதிமன்றத்தில் சிறை அதிகாரிகளிடம் உரையாற்றிய தலைமை நீதிபதி, ஷிரந்தி ராஜபக்சவுக்கு இன்று திறந்த இதய அறுவை சிகிச்சை நடைபெறுகிறதா என்பதை உடனடியாக விசாரித்து தமக்கு தெரிவிக்குமாறு சிறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சம்பந்தப்பட்ட அறிக்கை கிடைக்கும் வரை, இந்த வழக்கு இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
