உலகச் சந்தையில் எரிபொருள் விலையேற்றம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு, செப்டம்பர் மாத இறுதியில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோக நிறுவனங்கள் எதிர்நோக்கும் எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று (14) பதிலளிக்கும்போதே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ள போதிலும், உள்நாட்டுச் சந்தையில் ஒப்பீட்டளவில் குறைந்த விலையிலேயே எரிபொருள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையின் கீழ் வணிக நடவடிக்கைகளைத் தொடர்வது தமக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளதாக சில தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளன.
அதன்படி, குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் உரிய தீர்மானம் எடுக்கப்படும் என்றும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு தீர்வு காண பல வழிமுறைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதற்காக அரசாங்கம் தலையிட்டு நிவாரணம் வழங்குவது அல்லது கடந்த காலங்களை போன்று விலை நிர்ணயம் தொடர்பான தீர்மானத்தை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, தனியார் நிறுவனங்கள் பல முன்மொழிவுகளைச் சமர்ப்பித்திருந்த போதிலும், நுகர்வோரை கவனத்தில் கொண்டே இறுதித் தீர்மானம் எட்டப்படும் எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், ஒவ்வொரு மாத இறுதியிலும் எரிபொருள் விலைகளை திருத்தியமைக்கும் நடைமுறைக்கு அமைய, நிலவும் சூழ்நிலைகள் மற்றும் அனைத்துத் தரப்பினரதும் கருத்துக்களை கருத்தில் கொண்டு இம்மாத இறுதியில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எரிசக்தி அமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
