யாழ்ப்பாணத்தில் ஆசிரியராகப் பணி புரியும் பெண்ணின் ஒரு பவுண் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுன்னாகம் பொலிசாரினால் நேற்றையதினம் (26) குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ”ஏழாலை மகா வித்தியாலயத்தில் கடமை புரியும் குறித்த ஆசிரியர் நேற்றைய தினம் பாடசாலையில் இருந்து வரும்போது மருதனார்மடம் பகுதியில் வைத்து முகத்தை மூடி துணி கட்டியிருந்த நபர் ஒருவர் அவரது தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட ஆசிரியர் இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
அந்த அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிசார் நேற்றையதினமே 26 வயதுடைய குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர் ஹெரோயினுடன் கைதாகி 8 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த பின்னர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே விடுதலையாகி வந்தவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.