முறைக்கேடாக 97 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி மீண்டும் அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இன்று வழக்கு அழைக்கப்பட்ட போது, பிரதிவாதி தரப்பு கோரிய பல ஆவணங்களை அவர்களிடம் திறந்த நீதிமன்றத்தில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு ஒப்படைத்தது.
மேலும் ஆவணங்கள் தேவை என்றால் இன்றிலிருந்து இரண்டு வாரங்களுக்குள் நீதிமன்றத்திற்குத் அறிவிக்குமாறு நீதிமன்றம் பிரதிவாதி தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது.
பின்னர் வழக்கை ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி மீண்டும் அழைக்குமாறு தவணையிடப்பட்டது.
2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வெகுஜன ஊடகம், சுகாதாரம் மற்றும் சுற்றாடல் அமைச்சுக்களில் கடமையாற்றி முறைக்கேடாக 97 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட சொத்துக்களை ஈட்டிதன் ஊடாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டி முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி குசும் பிரியதர்ஷனி ஏபா, அவரது மகள்களான சமித்ரி ஜயனிகா ரம்புக்வெல்ல, சந்துல ரமாலி ரம்புக்வெல்ல, அமாலி நயனிகா ரம்புக்வெல்ல மற்றும் மருமகன் இசுரு புலஸ்தி பண்டார பொல்கஸ்தெனிய ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.