புத்தளத்தில் பேருந்தில் பயணித்த யுவதி ஒருவரை தொடர்ச்சியாக பாலியல் ரீதியான சேட்டைகளுக்கு உட்படுத்திய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தேவாயலம் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்த 21 வயதான யுவதியை பல்வேறு வகையில் பாலியல் ரீதியாக துன்புறுத்திய 45 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
பேருந்தில் பயணித்த குறித்த யுவதியை பல்வேறு தடவைகளில் சந்தேக நபர் அங்க சேட்டைக்கு உட்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக அச்சம் அடைந்த யுவதி பல பேருந்துகள் மாறி மாறி சென்ற போதும் சந்தேக நபரின் துன்புறுத்தல் தொடர்ந்துள்ளமையினால் ஆத்திரமடைந்த யுவதி அவரை புகைப்படம் எடுத்துள்ளார்.
குறித்த நபர் தொடர்பில் தனது சகோதரிக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில், குளியாப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
விரைந்து செயற்பட்ட பொலிஸார் அந்தப் பகுதியால் வரும் பேருந்துக்காக காத்திருந்துள்ளனர். பொலிஸ் நிலையத்தை அண்மித்து வந்த பேருந்தை நிறுத்தி சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் நீண்ட தூர பயணங்களில் ஈடுபடும் பேருந்துகளில் இவ்வாறு மோசமான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குருணாகலில் இருந்து நீர்கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த யுவதியே இந்த துன்புறுத்தலுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.