2026 முழுமையான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள்!

2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பணி ஆரம்பமாகியுள்ளது.

நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க பாதீட்டுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து வருகிறார்.

நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அச்சம் கொள்ளத் தேவையில்லை. பொருளாதாரம் ஸ்தீரத்தன்மையில் இருக்கிறது.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கு தேசிய வருமானம், அரச நிறுவனங்களை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தோம்.

உலக நாடுகளுக்கு இடையில் மோதல் இடம்பெற்ற போதிலும் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை.

இந்த வருட இறுதிக்குள் அந்திய செலவாணி 7 வீதமாக அதிகரிக்கும் .

2030 ஆம் ஆண்டுக்குள் பொதுக் கடனை 87% ஆகக் குறைக்க அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

வருமானம் குறைந்த மக்களுக்கு அஸ்வெசும திட்டத்தை முன்னெடுப்பதுடன், 2026 ஆம் ஆண்டு மீண்டும் அஸ்வெசும பெறுவோரை மீளாய்வு செய்யவுள்ளோம்.

சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகளை மீளாய்வு செய்து, நாட்டுக்கு தேவையான பிரதி பலன்களை மாத்திரம் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம்.

அரச நிறுவனங்கள் மற்றும் அரச சேவைகள் மீது மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நாட்டின் சேவைகளை விரைவாக பெற்றுக்கொள்வதற்கு ஈ சேவை அறிமுகப்படுத்தப்படும். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

2026 மார்ச் மாதத்தில் அனைவரும் தங்களுடைய சொத்து விபரங்களை அறிவிக்கும் வகையில் டிஜிட்டல் சேவை அறிமுகப்படுத்தப்படும்

கையூட்டல் மற்றும் ஊழலை ஒழிப்பதன் மூலம் பொருளதாரத்தை கட்டியெழுப்ப முடியும்.

2025 ஆம் ஆண்டு 823 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

2026 ஆம் ஆண்டு அரச சொத்துக்களை முகாமைத்துவம் செய்யும் சட்ட மூலத்தை நிறைவேற்றுவோம்.

குற்றங்களை கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது என்னை ஹிட்லர் என்று விமர்ச்சிக்கின்றனர்.

மக்களுக்கு எதிராக யாரேனும் தவறு இழைத்திருந்தால், அவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு அமைய தண்டனை வழங்கப்படும். யாருக்கும் பாரபட்சம் பார்க்கப்படாது.

நாட்டின் அனைத்து மக்களுக்கும் பொருளாதார பிரதிபலன்கள் சமமாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பதே 2026 ஆம் ஆண்டு பாதீட்டின் முக்கிய நோக்கமாகும்.

ஏற்றுமதியை இலக்காக கொண்ட பொருளாதாரத்தை கட்டியெழுப்புவோம்.

2025 ஆம் ஆண்டு 430 மில்லியன் டொலர் ஏற்றுமதி வருமானம் பெறப்பட்டுள்ளது.

எவரும் கடனை செலுத்துவது தொடர்பில் கவலை கொள்ள தேவையில்லை.

2032 ஆம் ஆண்டு தேசிய உற்பத்திக்கு சமமாக கடனை 90 வீதம் குறைப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

பொய்யான பரப்புரைகளை நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கை.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இந்த வருடம் தேசிய கடன் சேவை 760 மில்லியன் டொலர் அதிகரித்துள்ளது.

2028 ஆம் ஆண்டிலும் நாங்களே ஆட்சியில் இருப்போம் நாங்களே கடனை செலுத்துவோம்

2026 ஆம் ஆண்டு 15.3 மற்றும் 2027 ஆம் 15.4 வீதங்களில் தேசிய வருமானத்தை முகாமைத்துவம் செய்ய எதிர்பார்த்துள்ளோம். இந்த வருடம் இதுவரை 1373 மில்லியன் டொலர் வரை வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

கிராமிய வறுமையை நீக்குவதற்கு தேசிய வருமானத்தின் பிரதிபலன்களை கிராமிய மட்டங்களுக்கு கொண்டுச் செல்ல வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கை எடுப்போம்.

டிஜிட்டல் மயமாக்கலை மேம்படுத்துவதற்கு அதிக கவனம் செலுத்தப்படும். அதற்கு பல்வேறு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

பொருளாதார வளர்ச்சியை 7 சதவீதமாக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம். அரச ஏற்றுமதி 4 சதவீத்தால் அதிகரிப்பதற்கு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

வேலையின்மை 4.5 இல் இருந்து 3.8 சதவீதமாக குறைந்துள்ளது.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது அரச வருமானம் 900 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு பங்குச் சந்தைகள் பாரிய வளர்ச்சியை காண்பித்துள்ளன.

அரசியல் தலைவர்கள் தவறுகள் இழைத்தால் மக்களே அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நாட்டை உருவாக்கியுள்ளோம்.

அனைவரும் தங்களுடைய ஒவ்வொரு ரூபாய்க்கும் வரி செலுத்தும் சூழலை உருவாக்கியுள்ளோம். அதனாலேயே வரி வருமானம் அதிகரித்துள்ளது.

நேரடி மற்றும் மறைமுக வரி 75 – 25 சதவீதத்தில் இருந்து 40 – 60 சதவீதம் வரை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

கொழும்பு துறைமுக சட்டமூலத்தில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் சர்வதேச முதலீடுகள் இலங்கையில் இருந்து கை நழுவிச் செல்வதை தடுக்க முடியும்.

அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு தேசிய உற்பத்தியை 20 சதவீதமாக முகாமைத்துவம் செய்வதற்கு நடவடிக்கை.

முதலீடுகளை பாதுகாக்கும் நோக்குடன் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் முதலீட்டுப் பாதுகாப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்படும்.

நிதி நிலைமை மீண்டும் பலவீனமடையும் என்று எவரும் இனி கனவு காண கூடாது – ஜனாதிபதி
பணவீக்கத்தை 5 சதவீதத்துக்கு குறைவான மட்டத்தில் பேணுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

முதலீட்டாளர்கள் கொண்டுவரும் முதலீடுகளுக்கு ஏற்ப வதிவிட வீசா வழங்கும் முறைமை அறிமுகப்படுத்தப்படும்.

முதலீட்டு வலயங்களுக்கு அண்மித்த சேவைகளுக்காக மேலும் 1000 பில்லின் ரூபாய் ஒதுக்கீடு
காணி தகவல் உள்ளிட்ட மத்திய டிஜிட்டல் சேவைக்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
திகன மற்றும் நுவரெலியாவை மையப்படுத்தி புதிய இரண்டு தொழிநுட்ப முதலீட்டு வலயத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

தேசிய ஏற்றுமதி வளர்ச்சிக்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

தேசிய தனி பொருளாதார மையம் உள்ளிட்ட முதலீடுகளுக்காக 2500 மில்லியன் ரூபாய்

தொழிற்சாலை வலயத்தை அபிவிருத்தி செய்வதற்கு 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

பொருளாதார நெருக்கடியில் உள்ள வியாபாரிகளுக்கு 15 மில்லியன் ரூபாய் கடன்

வழங்குவதற்காக 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

விவசாய மேம்பாட்டுக்காக 1,700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

2026 ஆம் ஆண்டு பல்வேறு கடன்களுக்காக 80,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

ஊவா மாகாணத்தில் ஹப்புத்தளை உள்ளிட்ட பல பகுதிகள் சுற்றுலா தளங்களாக மேம்படுத்தப்படும். குறிப்பாக ஹப்புத்தளை பகுதியிலுள்ள சுற்றுலா தளத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

நீர்வள சுற்றுலா தொழிலை வளர்ச்சியடையச் செய்வதற்கு 3500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

ஹிங்குராங்கொடை விமான நிலையம் 2026 ஆம் ஆண்டு நிறைவு

திருகோணமலை, சிகிரியா உள்நாட்டு விமான நிலையத்தையும் யாழ்ப்பாணம் தேசிய விமான நிலையத்தையும் மேம்படுத்துவதற்கு 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

கட்டுநாயக்க விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான அபிவிருத்தி திட்டங்கள் அடுத்த வருடம் மீண்டும் ஆரம்பிக்கப்படும்

2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை விநியோகிக்கப்படும்.

டிஜிட்டல் அடையாள அட்டை தொடர்பான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிராகரித்தமைக்கு நீதிமன்றத்திற்கு நன்றி,

யார் எவ்வாறான சூழ்ச்சிகளை செய்தாலும் அடுத்த வருடம் மார்ச் மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டை விநியோகிக்கப்படும்.

அரசுக்கு சொந்தமான சொகுசு விடுதிகள் மற்றும் விடுமுறை விடுதிகள் சுற்றுலாத் துறைக்காக மேம்படுத்தப்படும்.

அனைத்து அரச சேவைகளுக்கான கட்டணங்கள் அனைத்தும் ஒன்லைன் மூலம் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதன் முதல் கட்டம் கட்டமாக ஒன்லைன் மூலம் கட்டணம் செலுத்தும் போது அரச சேவை கட்டணம் அறவிடப்படாது. இதனை நிவர்த்தி செய்யவும் மக்களை தெளிப்படுத்தவும் 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு. அத்துடன் மேலதிக மேம்படுத்தல் செயற்பாடுகளுக்காக மேலும் 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

2026 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அனைத்து டிஜிட்டல் கட்டணங்களுக்கான சேவை கட்டணம் நீக்கப்படும்.

QR முறை மூலம் 5000 ரூபாய்க்கு கீழ் கட்டணம் செலுத்தும் போது சேவை கட்டணம் நீக்கப்படும்.

டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைக்காக அமைக்கப்படும் புதிய கோபுரங்களுக்கான வரி 5 வருடங்களுக்கு நீக்கப்படும்.

2025 ஆம் ஆண்டு 30 கோபுரங்கள் மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டு 100 கோபுரங்கள் அமைக்கப்படும். அதற்கான முதலீட்டாளர்களுக்கு 5 வருடத்துக்கு வரி நீக்கம் வழங்கப்படும்.

க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்காக 2026 ஆம் ஆண்டு 6,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

போதைப்பொருள் ஒழிப்புக்காக 6000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

விசேட தேவையுடையவர்களுக்கான கொடுப்பனவுக்காக 19,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

2026 ஆம் ஆண்டு முதல் மஹாபொல 10,000 ரூபாய் வரை அதிகரிக்கப்படும்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் உயர் கல்விக்காக மஹாபொல கொடுப்பனவு 10000 ரூபாயுடன் மேலதிகமாக 5000 ரூபாய் வழங்கப்படும்.

மஹாபொல உள்ளிட்ட கொடுப்பனவுகளுக்காக 2,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

தொழிற்பயிற்சி நிலையங்களை புதுப்பித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக 8,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

50 தொழிற்பயற்சி நிலையங்கள் புதுப்பிக்கப்படும்.

82 ஆரம்ப சுகாதார நிலையங்களை 5 வருடங்களில் புதுப்பிப்பதற்காக 31,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

தேசிய இருதய பிரிவை உருவாக்குவதற்கு 12,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

சுவசெரிய சேவைக்காக 4.2 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

தம்புள்ளை மற்றும் தெனியாய பிரதேசங்களில் தேசிய மருத்துவமனை தங்குமிடங்களை அமைப்பதற்கு 10,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

மக்கள் மேம்பாட்டு செயற்பாடுகளுக்காக 25,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

பெருந்தோட்ட மக்களுக்கான அடிப்படை வேதனம் 2026 ஆம் ஆண்டு முதல் 1550 ரூபாய் வரை அதிகரிக்கப்படும். அதற்கு மேலதிகமாக அரசாங்கத்தினால் வருகை கொடுப்பனவாக 200 ரூபாய் வழங்கப்படும்.அதற்கமைய பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கான வேதனம் 1750 ரூபாயாக அதிகரிப்படவுள்ளது.

பெருந்தோட்ட நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் 2042 ஆம் ஆண்டுடன் நிறைவடையவுள்ளது.

அனைத்து நிறுவனங்களும் முறையாக அபிவிருத்தி செய்து, வருமானத்தை அதிகரித்து, பெருந்தோட்ட மக்களுக்கு முறையான கொடுப்பனவை வழங்காவிடத்து, அவை அரசாங்கத்தினால் மீளப்பெறப்படும். 2042 ஆம் ஆண்டுக்குப் பின்னர் எந்தவொரு நிறுவனத்தின் ஒப்பந்தமும் நீடிக்கப்படாது.

பெருந்தோட்ட மக்களின் வேதன அதிகரிப்புக்காக 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

கிராமிய பாதைகள் மறுசீரமைப்புக்காக 24,000 மில்லியன் ரூபாயும் கிராமிய பாலங்களுக்காக 2,500 மில்லியன் ரூபாயும் ஒதுக்கீடு

பெண் வியாபாரிகளை மேம்படுத்துவதற்காக 240 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு நிவாரண வட்டியுடன் வீட்டுக்கடன் வழங்கப்படும்

மனித – யானை மோதலை கட்டுப்படுத்துவதற்கு விசேட பயிற்சியுடன் 5000 சிவில் அதிகாரிகள் நியமனம்.

மனித – யானை மோதலுக்கு தீர்வை பெற்றுக்கொள்வதற்காக 10 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

நாடகம், சினிமா துறையை மேம்படுத்துவதற்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

சர்வதேச போட்டிகள் தொடர்பாக வீர வீராங்கனைகளை தயார்ப்படுத்துவதற்கு 1,163 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

வெங்காயம், கிழக்கு உள்ளிட்ட பொருட்களுக்கான களஞ்சியசாலைகளை மேம்படுத்துவதற்கு 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

பெண்களின் நலனோம்புகையை நோக்கமாக கொண்ட நிகழ்ச்சித் திட்டத்திற்காக மேலதிகமாக 200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

அரசாங்கத்தால் அடையாளம் காணப்பட்ட 400 நீர்ப்பாசன முறைமைகளுக்கு நடுத்தர கால வரவு செலவுத்திட்ட கட்டமைப்பிற்குள் ரூபா 4,000 மில்லியனை வழங்கவும், அதில் 100 நீர்ப்பாசன முறைமைகளை 2026 ஆண்டில் அமுல்படுத்துவதற்காக ரூபா 1,000 மில்லியன் ஒதுக்கீடு

தம்புள்ளை குளிரூட்டல் களஞ்சியசாலையை, விவசாய பொருட்களுக்கான களஞ்சியமாகத் திறம்பட பயன்படுத்த சூரிய சக்தி மின் முறைமையினை நிறுவ 250 மில்லியனை ஒதுக்கீடு

பால் உற்பத்தியை அதிகரிக்க “சிறு மற்றும் நடுத்தர அளவிலான கால்நடை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின்” கீழ் சாத்தியவள ஆய்வு உள்ளிட்ட ஆரம்பப் பணிகளுக்காக ரூபா 1,000 மில்லியன் ஒதுக்கீடு

படல்கம பால் தொழிற்சாலையின் பணிகளை விரைவில் நிறைவு செய்து, தற்போதைய நாரஹேன்பிட்டியவிலுள்ள பால் தொழிற்சாலையை இந்த இடத்திற்கு மாற்ற முன்மொழிவு

மில்கோ (பிரைவட்) லிமிடெட்டின் படல்கம பால் தொழிற்சாலையின் மீதமுள்ள பணிகளை நிறைவு செய்யத் தேவையான அடிப்படைப் பணிகளுக்கு, 3,000 மில்லியன் ஒதுக்கீடு

வடக்கு தெங்கு முக்கோண வலயத்தில் தெங்குச் செய்கையை தொடர்ந்தும் விஸ்தரிக்கும் பொருட்டு ரூபா 600 மில்லியன் ஒதுக்கீடு

சுமார் 447,000 ஏக்கர் பரப்புடைய 05 ஏக்கரிலும் குறைந்த தென்னந்தோட்ட உரிமையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு முறையான நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 2,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

பேருவளை, அம்பலாங்கொடை, குடாவெல்ல, நில்வெல்ல உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்தல் என்பவற்றுக்காக ரூபாய் 300 மில்லியன் ஒதுக்கீடு

மீன்பிடித் துறைமுகங்களின் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்தும் மேம்படுத்துவதற்காக, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக 350 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மீனவர்களுக்கு உயிர்ப்பாதுகாப்பு அங்கிகளை பெற்றுக் கொடுப்பதற்காக 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

மீன் விளைச்சலை பெற்றுக்கொள்வதன் மூலம் மீனவ சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக துறைமுகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

மீன்கள் நடமாடும் இடங்களை இனங்காண்பதற்காகவும் உரிய தகவல்களை மீனவர்களுக்கிடையில் வினைத்திறனுடன் தொடர்பாடல் மேற்கொள்ளும் முறையொன்றை வகுப்பதற்காகவும் 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

நீர்ப்பாசனத்துறையை மேம்படுத்துவதற்காக 91,700 மில்லியன் ஒதுக்கீடு
முந்தெனி ஆறு கருத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள பஹல மல்வத்து ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக 5,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

கல்ஓயா, இராஜாங்கனை ஓயா, ஹுறுலு வாவி, மின்னேரியா வாவி உள்ளிட்ட வாவிகள் மற்றும் அணைக்கட்டுகளின் புனரமைப்பு பணிகளுக்காக ரூபா 6,500 மில்லியன் ஒதுக்கீடு

650 சிறிய குளங்கள், வாய்க்கால்கள், அருவித்தொடர் முறைமையை மேம்படுத்துதல் மற்றும் ஏனைய புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக ரூபா 8,350 மில்லியன் ஒதுக்கீடு

நகர வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதற்கு நிலைபேறான தீர்வொன்றுக்காக 250 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு

ஜிங்கங்கை மற்றும் களுகங்கை ஆகிய நதிகளின் வெள்ளப்பெருக்கை முகாமை செய்வது தொடர்பாக முறையான சாத்தியவள ஆய்வொன்றை மேற்கொள்வதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

வெள்ள அனர்த்தத்தின் காரணமாக பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் விவசாயம் செய்வதற்கு முடியாமல் போன வயல்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காக 1,200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு அவதானத்தை கட்டுப்படுத்துவதற்காக கிரான் பாலத்தையும், பொண்டுக்கள் சேனை பாலத்தையும் நிர்மாணிப்பதற்குத் 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், கண்டி,யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் குருணாகல் முதலான மாவட்டங்களை உள்ளடக்கியதாக சமுதாய நீர்வழங்கல் கருத்திட்டமாக, குடிநீர் வழங்கல் கருத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு 85,700 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

புதிய நீர் வழங்கல் கருத்திட்டமொன்றை லுணுகம்வெஹெர பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்கு 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

“பொதுமக்கள் போக்குவரத்துச் சேவை – வினைத்திறன் மிக்க பயணமுடிவு” என்ற அரசாங்கத்தின் நீண்டகால பயணிகள் போக்குவரத்து திட்டத்திற்கு 67,200 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

பொதுப் போக்குவரத்துத் துறையை பலப்படுத்தும் பொருட்டு தூர பயணச் சேவைகளுக்காக 600 பஸ் வண்டிகளை, இலங்கைப் போக்குவரத்து சபை மூலம் போக்குவரத்துக்கு ஈடுபடுத்த 3,600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

307 இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பழுதடைந்த எஞ்சின்களை மீள் நிறுவுவதற்காக 2,062 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போ மற்றும் வேலைத் தலங்களுக்குத் தேவையான கருவிகள், இயந்திர உபகரணங்கள் மற்றும் உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக 790 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

இலங்கை தொடருந்து திணைக்களத்திற்கு புதிய 05 எஞ்சின் தொகுதிகளை பெற்றுக் கொள்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளுக்கு 3,300 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

ஒட்டுமொத்த வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் 2026 ஆம் ஆண்டிற்கு 342,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

இடைநிறுத்தப்பட்டிருந்த அதிவேக வீதிகளுள், குறிப்பாக மத்திய அதிவேக வீதியின் கடவத்தை – மீரிகம வீதிப் பகுதியை நிர்மாணிப்பதற்காக, 66,150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

பொத்துஹெர தொடக்கம் றம்புக்கனை வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகளை 2027 ஆண்டின் முதல் காலாண்டில் பூர்த்தி செய்வதற்கு 10,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

கட்டுகஸ்தோட்டை தொடக்கம் கலகெதர வரையிலான வீதிப் பகுதியை விஸ்தரிப்பதற்கு தேவையான ஆய்வுகளை அடுத்த வருடம் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கண்டி பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தை நிர்மாணிப்பதற்கு சமாந்தரமாக கண்டி நகருக்கு பிரவேசிப்பதற்கான ஒரு சில வீதிகளை விஸ்தரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் நிதி ஒதுக்கீடு

குருநாகல் தொடக்கம் தம்புள்ளை வரையிலான உத்தேச அதிவேக வீதிக்கான காணி கையகப்படுத்தல் பணிகளை பூர்த்தி செய்ய 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் கஹத்துடுவை தொடக்கம் இங்கிரிய வரையிலான வீதியின் காணி கையகப்படுத்தும் பணிகளுக்கு 1,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

கொழும்பு துறைமுகத்திற்கும், துறைமுக நகரத்திற்கும் இடையில் வீதி இணைப்பை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு உயர்த்தப்பட்ட துறைமுக நுழைவு அதிவேக வீதியிலிருந்து மரைன் ட்ரைவ் (Marine Drive) வரை இணைப்பு வீதியை நிர்மாணிப்பது தொடர்பான ஆய்வொன்றை மேற்கொள்வதற்கு 330 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

2024 ஆம் வருடத்தில் 24,589 வீதி விபத்துக்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன. இதில் 2,368 உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன.

வீதிகளுக்காக பாதுகாப்பு மூலோபாயங்களை உட்சேர்த்தல், பாதுகாக்கப்பட்ட வீதிப் பகுதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட வீதிப் பாதுகாப்புடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

இலங்கை மின்சார சபை வெளியிட்ட 2025-2044, நீண்டகால மின் உற்பத்தித் திட்டத்திற்கமைய, அடுத்த பத்தாண்டுகளில் மின்சாரத்திற்கான தேவை சுமார் 60% ஆக அதிகரிக்கும்.

எரிசக்தி நிலைமாற்றச் சட்டம் (Energy Transition Act) அடுத்த ஆண்டுக்குள் கொண்டுவரப்படும்.

நவீன திறன் தொழில்நுட்பம் மூலம் மின்சார கடத்தல் மற்றும் விநியோக கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும். எரிசக்தி, டிஜிட்டல் மற்றும் போக்குவரத்து என்பவற்றுக்கான ஒருங்கிணைந்த பொருளாதார அபிவிருத்தி கட்டமைப்பு (Integrated Economy Development Framework) நிறுவப்படும்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்துவதற்காக 1,800 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விளையாட்டுக் கட்டிடத் தொகுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் விளையாட்டரங்குகளை மேம்படுத்துவதற்காக 225 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், கல்முனை விளையாட்டரங்கை நிறைவு செய்வதற்காக 150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

ஊடகவியலாளர்களின் திறன் அபிவிருத்திக்கு அவசியமான உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு உயர் கல்வி புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

மனித-யானை முரண்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான பணிகளுக்காக மின்வேலி நிர்மாணப் பணிகளை செய்வதற்கு மேலதிகமாக 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

பல்வேறு அரச நிறுவனங்களால் நிர்மாணிக்கப்பட்டு தற்போது கைவிடப்பட்டுள்ள அல்லது பகுதியளவு முடிக்கப்பட்டு முறையாகப் பயன்படுத்தப்படாமல் 2,700 கட்டடங்கள் இருக்கின்றமை தெரிய வந்துள்ளது.

பயன்படுத்தப்படாத கட்டடங்கள் அல்லது கட்டமைப்புகள் போன்றவற்றை மேம்படுத்தி விருந்தகங்கள், வணிக மையங்கள், தொழிற்சாலைகள் அல்லது வேறு நோக்கங்களுக்காக வருமானம் ஈட்டும் திட்டங்களுக்காக, திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

கெரவலப்பிட்டி சுங்க உறுதிப்படுத்தல் மையம் மற்றும் புளூமெண்டல் வர்த்தக வசதி மையம் ஆகியவை நிறுவப்படும்.

பொருளாதார மந்தநிலை மற்றும் ஏனைய காரணிகளால் இடைநிறுத்திவைக்கப்பட்டிருந்த விமான நிலைய அபிவிருத்தியின் இரண்டாம் கட்ட கட்டுமானம் 2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படும்.

எதிர்வரும் ஆண்டில் கொழும்பு துறைமுகத்தின் இயலளவை மேம்படுத்தி, தொழிற்பாட்டுத் வினைத்திறனை மேம்படுத்தும்.

யாழ்ப்பாணம், எஹெலியகொட, மட்டக்களப்பு, சிலாபம், மாத்தறை உள்ளடங்கலாக அடையாளம் காணப்பட்ட 10 நகரங்களின் சாத்திய வளங்களை அடையாளங்காணும் ஆரம்ப பணிக்காக 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

2026 முதல், நகர அபிவிருத்திச் செயன்முறை முறையான திட்டத்திற்கமையவும், சரியான ஆய்வுகளுடனும் மேற்கொள்ளப்படும். வினைதிறன்மிக்க, நிலைபேறான, சுற்றுலா மற்றும் முதலீடு என்பவற்றை ஈர்ப்பதனுடன் இணைந்த நகர அமைப்பை நிறுவுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

மாத்தளை நகருக்குள் நுழையும் போது தற்போதுள்ள நெரிசலைக்குறைக்க, பாதைகளின் எண்ணிக்கையை 4 பாதைகளாக விரிவுபடுத்தவும், தேவையான காணிகளை கையகப்படுத்தவும், நகரத் திட்டத்தைத் தயாரிக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்.

ஹட்டன் நகரில் நிலவும் அதிக போக்குவரத்து நெரிசலுக்கு பொருத்தமான தீர்வுகளை வழங்குவதற்கு 2026 ஆம் ஆண்டில் அவசியமான நகரத் திட்டம் தயாரிக்கப்படும் அதேவேளை, அங்கு தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு குறுகியகால துரித தீர்வை வழங்க 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

இரத்தினபுரி நகரம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, பழைய நகரத்தில் அமைந்துள்ள அரசாங்க உத்தியோகபூர்வ வதிவிடங்களை புதிய நகரப் பகுதிக்கு இடமாற்ற 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

சுகாதாரமான திண்மக்கழிவகற்றல் வாகனங்கள் (compactor), டிராக்டர்கள், பெட்டிகள் போன்ற உபகரணங்ளை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்க நிதி ஒதுக்கீடு

திண்மக்கழிவுகளை முறையாக அகற்றுவதற்கும் பராமரிப்பதற்கும் வாகனங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்காக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் திண்மக்கழிவு முகாமைத்துவத்தை செயல்படுத்துவதற்காக 900 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

உள்ளூராட்சி நிறுவனங்கள் திறைசேறியிலிருந்து சம்பளம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை வழங்கும்போது, மதிப்பீட்டில் இருந்து 20% மற்றும் 40% வீதத்தைக் கழிப்பதன் மூலம் தற்போதுள்ள ஏற்பாடுகளை வழங்கும் முறைக்கு பதிலாக ஒரு புதிய முறை அறிமுகப்படுத்தப்படும்.

உள்ளூராட்சி நிறுவனங்களை வலுப்படுத்துதல், உள்ளூராட்சி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வருமானம் ஈட்டல் நிகழ்ச்சித்திட்டத்திற்கு 2,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

வீட்டுப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் சகல தரப்பினர்களையும் உள்ளடக்கியதாக புதிய அணுகுமுறைக்கு அமைய, தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகள் அடங்கலாக 27,000 புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வீட்டுவசதிப் பிரச்சினைகளுக்கு தீர்வாக, அடுத்த ஆண்டு முதல் “தமக்கெனதோர் இல்லம் – அழகான வாழ்க்கை” வீட்டுவசதி நிகழ்ச்சி திட்டம் கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும், நடுத்தரக் காலத்தில் 70,000 வீடுகளைக் நிர்மாணிக்க, 2026 இல் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 7,200 மில்லியனுக்கு மேலதிகமாக மேலும் 3,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

அப்பிள் வத்த, மாதம்பிட்டிய, பெர்குசன் மாவத்தை, ஒபேசேகரபுர, ஸ்டேடியம்கம, கொலம்பகே மாவத்தை மற்றும் டொரிங்ரன் பிளேஸ் ஆகிய இடங்களில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக 15,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

சீன அரசாங்கத்தின் உதவியுடன் மொறட்டுவை, பேலியகொடை, தெமட்டகொடை, மகரகம மற்றும் கொட்டாவ ஆகிய இடங்களில் சுமார் 1,996 வீடுகளுக்காக ஏற்கனவே ரூபா 6,500 மில்லியன் ஒதுக்கீடு. அவ்வீடுகளுள் ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்கு வீடுகள் வழங்கப்படும்.

அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட பழைய அடுக்குமாடி வீடமைப்பு கட்டட தொகுதியை புனரமைப்பதற்கு 1,180 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

களனிப் பள்ளத்தாக்கு தொடருந்து மார்க்க அபிவிருத்திக்குத் தடையாகவுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களை வேறு பொருத்தமான இடங்களில் குடியமர்த்துவதற்காக ரூபா 840 மில்லியன் ஒதுக்கீடு

இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் மத்திய, ஊவா, சபரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் வசிக்கும் மலையக தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் வீட்டுவசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 2,000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக 4,290 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் 943 வீடுகளின் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்வதற்கு 1,305 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

மண்சரிவு மற்றும் வேறு சுற்றுச்சூழல் காரணங்களால் பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்களில் வசிக்கும் சுமார் 9,000 கிராமப்புற மற்றும் தோட்டப்புற குடும்ப அலகுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இக்குடும்ப அலகுகளுக்காக அடுத்த 3 வருடங்களில் 1,200 குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணிப்பதற்கு தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1,000 மில்லியனுக்கு மேலதிகமாக 2,000 மில்லியன் நிதி ஒதுக்கீடு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போர் காரணமாக எந்தவொரு வீடும் அற்ற குடும்பங்களுக்காக 2,500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள 3,850 மில்லியன் ஒதுக்கீடு 5,000 மில்லியனாக அதிகரிக்கப்படும்.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையால் அடையாளம் காணப்பட்டுள்ள ஆபத்தில் உள்ள சிறுவர்களின் குடும்பங்களுக்கு காணியை கொள்வனவு செய்து வீடொன்றை நிர்மாணிப்பதற்கு, தலா 2 மில்லியன் நிதி ஒதுக்கீடு. அதற்கமைய 2,000 மில்லியன் நிதி ஒதுக்கீடு

21 நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கும், ஆய்வுத்துறையில் உள்ள 14 நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய மட்டத்தில் நிறுவனமொன்றை தாபிப்பதற்கும், ஏற்கனவே வணிக வடிவில் செயற்படாத 09 நிறுவனங்களை நிதி சுயாதீனத்துடனான நிறுவனங்களாக நிலைமாற்றுவதற்கும்,13 நிறுவனங்களை ஒழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசாங்கத்தால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட டிஜிட்டல் மயமாக்கல் நிகழ்ச்சித் திட்டத்திற்கு (Digital Blue Print) இணங்கும் வகையில் உள்ளீடுகளுக்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக மேலும் 1,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

இனிவரும் காலங்களில் அரச துறையில் சகல ஆட்சேர்ப்புகள், பதவி உயர்வுகள் உள்ளிட்ட செயற்பாடுகள் அரசியல் தலையீடின்றி உரிய பரீட்சை மற்றும் சேவைப் பிரமாணங்களின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்வதன் மூலம், இளைஞர், யுவதிகளுக்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்படும்.

அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசிய வாகனங்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலத்தின் இறுதியில் அவற்றைத் திருப்பிப் பெறும் அடிப்படையில் வழங்கப்படும் வாகனங்கள் மற்றும் இயந்திர உபகரணங்களை கொள்வனவு செய்ய 12,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

10 அரசு தொழில்முயற்சிகளில் நிலுவையாக உள்ள ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம், பணிக்கொடை போன்ற நியதிச்சட்ட கொடுப்பனவுகள் மற்றும் வரிகளின் நிலுவைத் தொகையைத் தீர்ப்பனவு செய்வதற்கு 5000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வானக இறக்குமதிக்கான வரிச்சலுகை அனுமதி பத்திரம் வழங்கப்படாது.

நிறுவனங்களின் தற்போதுள்ள ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதிய, ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய நிலுவை, அதேபோன்று ஓய்வுபெற்ற ஊழியர்களின் பணிக்கொடைகளை செலுத்துதலை உறுதிசெய்வதற்கும், அவற்றின் ஐந்தொகைப் பொறுப்புகளை மறுசீரமைப்பதற்கும் எதிர்பார்ப்பு

சிரேஷ்ட பிரசைகளின் சேமிப்புகளுக்கு அரசினால் ஏற்க வேண்டிய வட்டியில் செலுத்தப்படாதுள்ள 10,000 மில்லியன் 2025 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்டுள்ள அதேவேளை,எஞ்சிய ரூபா 45,700 மில்லியன் நிலுவைத் தொகையை இவ்வாண்டிலேயே செலுத்துவதற்கு நடவடிக்கை

அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவை தாபிப்பு

2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சம்பள திருத்தங்களுக்கு அமைய, இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரூபா 110 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, இச் சம்பளங்களை அனைத்து அரச ஊழியர்களுக்கும் 2026 ஜனவரி தொடக்கம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியங்கள் 2019 ஆம் ஆண்டின் சம்பள கட்டமைப்பின் அடிப்படையில் திருத்தப்பட்ட ஓய்வூதியத்தை 2026 ஜூலை மாதம் முதல் செலுத்துவதற்கு 20,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஆதனக் கடன் திட்டத்தினை ரூபா 50 இலட்சம் வரை வழங்குவதற்கான புதியதொரு கட்டமைப்பின் கீழ் 30 இலட்சம் வரை 4 சதவீத வட்டிச் சலுகையிலும், ரூபா 30 இலட்சத்திலிருந்து ரூபா 50 இலட்சம் வரை 2 சதவீத வட்டிச் சலுகையிலும் கடன்களை வழங்குவதற்கு 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் நலன்கள் நிலையான அளவில் இருப்பதை உறுதிசெய்யும் பொருட்டு, ரூபா 125 பங்களிப்புத் தொகையை மேலும் 75 ரூபாவினாலும், மாதாந்த பங்களிப்புத் தொகையான ரூபா 300 மற்றும் ரூபா 600 ஆகியவற்றை மேலும் 150 ரூபாவினாலும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணமான 10,000 ரூபாயை 15,000 ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை

அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கேற்ப, 4.2 சதவீத வட்டி அடிப்படையில் பெற்றுக் கொள்ளக் கூடிய இடர் கடன் முற்பணத் தொகையை, 250,000 இலிருந்து 400,000 வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை .

அரச ஊழியர்களின் முற்பணக் கணக்கு வரையறைக்கென 10,000 மில்லியன் ஒதுக்கீடு
கஷ்டப்பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்படாதிருப்பதனால், அத்தகைய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் கொடுப்பனவை 1,500 ரூபாவால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை

கல்வி இலக்குகளை அடைவதில் அதிபர்களின் நிர்வாகப் பொறுப்புகள் மற்றும் பொறுப்புகூறலை அங்கீகரிக்கும் வகையில், அதிபர் பதவியில் பணியாற்றும் அதிபர்களுக்கு வழங்கப்படும் அதிபர் கொடுப்பனவை 1,500 ரூபாவால் அதிகரிக்கவும் கல்வி இலக்குகளை அடைவதை அதிகரிப்பதற்காக 1,000 மில்லியன் ஒதுக்கீடு

1,000 கடவைக் காப்பாளர்ளுக்கு தற்போது எட்டு மணி நேர கடமை நேரத்திற்கு வழங்கப்படும் 7,500 குறைந்தபட்ச கொடுப்பனவை 15,000 வரை அதிகரித்து வழங்குவதற்கு 250 மில்லியன் ஒதுக்கீடு

தற்காலிக, அமைய, மாற்று, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் ஆட்சேர்க்கப்பட்ட தற்போது பல்வேறு நிறுவனங்களில் 6 மாதங்களுக்கும் மேலாக பணியாற்றும் 9,800 பணியாளர்களுக்கும் நிரந்தர நியமனங்களை வழங்க நடவடிக்கை

அரசாங்க வருமானம் 2024 இன் முதல் ஒன்பது மாதங்களில் ரூபா 2,900 பில்லியன் என்ற அதேவேளை 2025 இன் அதேகாலப்பகுதியில் ரூபா 3,800 பில்லியனாக அதிகரித்துள்ளது.
பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துநர்களின் எண்ணிக்கை 2024 உடன் ஒப்பிடுகையில் 2025 செப்டம்பர் 30 அன்று 3 இலட்சத்தினால் அதிகரித்துள்ளது.

2026 ஏப்ரல் மாதத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் மீதான விசேட பண்ட அறவீட்டை நீக்கி, அதற்குப் பதிலாக பெறுமதிசேர் வரி உட்பட பொதுவான வரிக் கட்டமைப்பை விதிப்பதற்கு நடவடிக்கை

பெறுமதி சேர் வரிக்கும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு அறவீட்டுக்கும் பதிவுசெய்வதற்கான வருடாந்த எல்லையை 2026 ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் வகையில் ரூபா 60 மில்லியனிலிருந்து ரூபா 36 மில்லியன் வரை குறைப்பதற்கு நடவடிக்கை

2026 ஏப்ரல் மாதத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் துணி மீதான செஸ் வரியை நீக்குவதற்கும் அதற்குப் பதிலாக பெறுமதி சேர் வரியை விதிப்பதற்கும் நடவடிக்கை

2026 ஏப்ரல் மாதத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் விற்பனைக்குப் பின்னரான சந்தர்ப்பத்தில் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை விலக்களிக்க நடவடிக்கை

தற்சமயம் நடைமுறையிலுள்ள 0%, 15%, 20% என்ற தீர்வை வரி விகிதங்களை, 2026 ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வருமாறு தீர்வை விகிதங்களை 0%, 10%, 20%, 30% என்றவாறு தேசிய தீர்வை கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை

2026 ஜனவரி மாதத்திலிருந்து நவீன வரி கணக்காய்வு சட்டகமொன்று அறிமுகம் செய்யப்படும்
2011 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க தொலைத் தொடர்பு வரிச் சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை

நிதி தூய் தாக்குதலினைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கலை தடுப்பதற்குமான சட்டம் (AML/CFT Framework) தொடர்பில் நிதி புலனாய்வுப் பிரிவு மற்றும் பிற செயற்படுத்தும் நிறுவனங்களுடன் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு சட்ட ஏற்பாடுகள், சம்பந்தப்பட்ட வரி சட்டதிட்டங்களில் உட்சேர்க்க நடவடிக்கை

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய அலுவலக கட்டிடத் தொகுதியைத் தாபிப்பதற்காக ரூபா 2,000 மில்லியன் ஒதுக்கீடு

வரவு செலவுதிட்ட நிலை அறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 31 திகதிக்கும் முன்னதாக சமர்ப்பிக்க நடவடிக்கை

2025.09.26 திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் குறித்துரைக்கப்பட்ட கடன்பெறுதல் வரையறையை 60 பில்லியனால் குறைக்க நடவடிக்கை

மாகாண சபைத் தேர்தல் குறித்து சட்டமா அதிபரின் கருத்துக்களை கோருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு பாதீட்டில் 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தற்போது எவ்வித சட்டங்களும் இல்லை. எனவே, புதிய சட்டத்தை உருவாக்கிக் கொடுத்தால் தேர்தலை நடத்த முடியும்.

வரலாற்றிலேயே முதற் தடவையாக பொது மக்கள் நிதியங்கள் தவறாகப் பயன்படுத்தப்படாத அல்லது முறையற்ற சிறப்புரிமைகளுக்குப் பயன்படுத்தப்படாத அரசாங்கமொன்றின் இரண்டாவது பாதீடு முன்வைக்கப்பட்டுள்ளது.

2026 ஆண்டில் ரூபா 7,000 மில்லியன் அளவிலான கடன்களுக்கு காப்பீடு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

கிராமிய கடன் திட்டத்தின் கீழ் 5 சதவீத வட்டித் தள்ளுபடியுடன் ரூபா 3 மில்லியன் வரையிலான விவசாய பயிர்ச் செய்கைக் கடன் பெற்றுக்கொடுப்பதற்கு 1,700 மில்லியன் ஒதுக்கீடு

தொழில் முயற்சியாளர்களுக்காக சலுகை வட்டியில் ரூபா 50 மில்லியன் வரையில் கடன் பெற்றுக்கொடுப்பதற்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் அபிவிருத்தி கடன் திட்டமொன்றை உருவாக்குவதற்கு 7,700 மில்லியன் ஒதுக்கீடு

அடமானக் கடன் திட்டத்தின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு ரூபா 50 மில்லியன் வரையில் சலுகை வட்டி வீதத்தில் கடன் பெற்றுக்கொள்ள 15,000 மில்லியன் ஒதுக்கீடு

இலங்கை சுற்றுலாத் துறை மேம்படுத்தல் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள குறை பயன்பாட்டு சுற்றுலா அபிவிருத்தி நிதியிலிருந்து ரூபா 500 மில்லியனை பயன்படுத்துவதற்கு முன்மொழி
செயற்கை நுண்ணறிவு, க்ளவுட் (cloud) கணினி மற்றும் தரவுத்தளம் உள்ளடங்களாக அடுத்த பரம்பரைக்கு டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூபா 3,000 மில்லியன் ஒதுக்கீடு
2025 முதலாவது காலாண்டில் ரூபா 2,000 பில்லியனிற்கு மேற்பட்ட அரச சேவைகளுக்கான கொடுப்பனவுகள் Lankapay தளத்தினூடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயிற்சி புலமைப் பரிசில்கள் மற்றும் தேசிய மொழி தரவுத்தொகுப்பினை அபிவிருத்தி செய்தல், பல்கலைக்கழக மற்றும் பாடசாலைத்துறைகளில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு மற்றும் க்ளவுட் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்காக 750 மில்லியன் ஒதுக்கீடு

ஏற்றமதி மற்றும் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு முதலீட்டுச் சபையினூடாக “மெய்நிகர் விசேட பொருளாதார வலயமொன்றை (Virtual Special Economic Zones) உருவாக்குவதற்கு நடவடிக்கை

அடையாளம் காணப்பட்ட சிறைச்சாலைகளை விரிவுபடுத்துதல் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட இடங்களுக்கு இடமாற்றம் செய்தல், சிறை உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் கைதிகளை சமூகத் திட்டங்களுக்கு பரிந்துரைத்தல் மற்றும் திறந்தவெளி சிறைகளில் தடுத்து வைத்தல் போன்ற கருத்திட்டங்களுக்கு 2,000 மில்லியன் ஒதுக்கீடு

விசேட தேவையுடையவர்கள் பிரதேச செயலகங்கள் தொடருந்து நிலையங்கள், பஸ்தரிப்பு நிலையங்கள், நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள் முதலான பொது இடங்களுக்கு செல்வதற்கான வசதிகளை வழங்குதல் என்பவற்றுக்காக வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ரூபா 1,000 மில்லியன் ஒதுக்கீடு

வெளிநாட்டிலுள்ள எமது இலங்கையர்கள் திரும்பி வந்து, முதலிட்டு நாம் அனைவரும் நேசிக்கின்ற எமது தாய்நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் கைகோர்க்குமாறு அழைப்பு

Related Posts :

Special News :

Entertainment :

Special News

gun shoot
இரத்தினபுரி - கலவான பகுதியில் துப்பாக்கிச் சூடு: இருவர் வைத்தியசாலையில் அனுமதி!
trump
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெயரில் இந்தியாவில் வாக்காளர் அட்டை!
srilanka
தெற்காசியாவில் வாழ்வதற்கு மிகவும் செலவு மிகுந்த நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம்!
mannar
மன்னாரில் கத்தோலிக்க குருவின் உடையில் வந்து நிதி சேகரிப்பில் ஈடுபட்ட நபருக்கு நேர்ந்த கதி!
anura
போதைப்பொருட்களுக்கு எதிரான சவாலை எதிர்கொள்ளத் தயார்: ஜனாதிபதி வலியுறுத்தல்
pugi
யாழில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி பப்ஜி விளையாடிய முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் உயிர்மாய்ப்பு!