“வட்டுவாகால் விகாரைக்குக் கீழே செம்மணியை விடப் பெரிய மனிதப் புதைகுழி உள்ளது!” – நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்

முல்லைத்தீவு – வட்டுவாகால் விகாரைக்குக் கீழே அகழ்வுகளை மேற்கொண்டால், இந்தச் செம்மணியை விடவும் பல மடங்கு பெரியதொரு மனிதப் புதைகுழி அடையாளம் காணப்படும் என்று வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி குறிப்பிட்டுள்ளார்.

செம்மணி மனிதப் புதைகுழியில் பிஞ்சுக் குழந்தைகள், சிறுவர்கள், பெரியவர்கள் எனத் தமிழ் மக்கள் குடும்பம் குடும்பமாகக் கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளனர்.

இது தற்சமயம் இலங்கையின் மிகப்பெரிய மனிதப் பேரவலத்தின் சாட்சியாக உருவெடுத்திருக்கும் நிலையில், இதற்குச் சர்வதேச நாடுகளும் இலங்கை அரசும் என்ன பதிலைக் கூறப்போகின்றன? என்றும் கேள்வியெழுப்பினார்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் மற்றும் வடக்கு, கிழக்கில் உள்ள ஏனைய புதைகுழிகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

“எங்களுடைய தமிழ் இனத்தின் மீதான திட்டமிட்ட அழிவுகளை இலங்கை அரசினுடைய ஒவ்வொரு ஆட்சியாளர்களும் தொடர்ச்சியாகச் செய்துகொண்டே வந்திருக்கின்றார்கள்.

ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் எமது இனத்தை வன்முறையாக அழித்தமைக்கான அசைக்க முடியாத சாட்சிகள், இயற்கையின் நீதியால் தற்போது ஒவ்வொன்றாக வெளியே வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

செம்மணியில் தற்போதைய அகழ்வுகளின் மூலம் வெளிவரும் உண்மைகள் உலகத்தையே உலுக்கியுள்ளன. தமிழர் தாயகப் பகுதிகளில் இன்னும் எத்தனையோ இடங்களில் இவ்வாறான மனிதப் புதைகுழிகள் இரகசியமாக மூடிமறைக்கப்பட்டுள்ளன.

அவற்றை முறையாகத் தோண்டத் தொடங்கினால், இன்னும் பேரதிர்ச்சியைத் தரும் வகையிலான மனித என்புக் குவியல்கள் தொடர்ச்சியாகக் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

குறிப்பாக, முல்லைத்தீவு வட்டுவாகால் பகுதியில் அமைந்துள்ள விகாரைக்குக் கீழே அகழ்வுகளை மேற்கொண்டால், செம்மணியை விட மிகப்பெரியதொரு மனிதப் புதைகுழி வெளிச்சத்துக்கு வரும். இதற்காக அந்த விகாரையை உடைத்துத்தான் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்பதில்லை.

தற்கால நவீன தொழில்நுட்பக் கருவிகளைப் பயன்படுத்தி, ‘ஸ்கேன்’ செய்வதன் மூலமே அங்கு நிலத்தடியில் எத்தனை ஆயிரக்கணக்கான என்புத் தொகுதிகள் புதைக்கப்பட்டுள்ளன என்பதைத் துல்லியமாக ஆராய்ந்து அறிய முடியும்.

இதேபோல், கேப்பாப்பிலவு போன்ற இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த மற்றும் இருக்கின்ற பல இடங்களில் பாரிய மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் என அப்பகுதி மக்கள் இன்றும் பலத்த அச்சத்துடன் இருக்கின்றார்கள்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பெரும்பாலான இடங்களில் அப்பாவிப் பொதுமக்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, கூட்டங்கூட்டமாகப் புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.

சந்தேகத்துக்குரிய அந்த மனிதப் புதைகுழிகள் அனைத்தும் சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் முழுமையாகத் தோண்டப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.

இந்த விவகாரத்தில் சர்வதேச சமூகம் நேரடியாகத் தலையிட்டு, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குப் பாரபட்சமற்ற நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்பதே எங்களின் பிரதான எதிர்பார்ப்பாகும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

srilankan airlines
சிட்னி நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் மீது மின்னல் தாக்குதல்; 40 நிமிடங்களில் மீண்டும் கட்டுநாயக்கவில் தரையிறக்கம்!
Sangeetsan
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான கலைஞர் சங்கீத்சனின் பிணை மனு மீதான உத்தரவு 23 இல்!
negombo protest
உயிர்த்த ஞாயிறு விசாரணைக்கு இடையூறு விளைவிக்காதே: நீர்கொழும்பில் அமைதிப் போராட்டம்!
srilanka weather
காங்கேசன்துறை - கற்பிட்டி கடற்பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம்
yositha rajapaksha
கல்வித் தகுதி மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகளில் முறைகேடு: இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் யோஷித ராஜபக்ஷ!
சசி வீரவன்ச
சசி வீரவன்சவின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு: சிறைத்தண்டனை உறுதி!