சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனமான S&P Global Ratings, இலங்கையின் நீண்டகால வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணயக் கடன் தரப்படுத்தலை ‘CCC+/C’ இலிருந்து ‘B-/B’ ஆக உயர்த்தியுள்ளது.
இதன்படி, குறித்த கடன் தரப்படுத்தல்களின் எதிர்கால நோக்கு நிலையானதாக (Stable) பேணப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று (27) வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இலங்கையின் குறுகியகால வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணயக் கடன் தரப்படுத்தல்களும் ‘C’ இலிருந்து ‘B’ ஆக உயர்த்தப்பட்டுள்ளன.
இலங்கையின் அரச வருமானம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றமை மற்றும் சவாலான சர்வதேச பொருளாதாரச் சூழலுக்கு மத்தியிலும் வெளிநாட்டு கையிருப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றமை ஆகியவை இந்தத் தீர்மானத்திற்கான முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக S&P Global Ratings தெரிவித்துள்ளது.
மேலும், பொருளாதாரத்தின் மீள்திறன் காரணமாக அரசாங்கத்தின் நிதி நிலைமை மற்றும் வெளிநாட்டு கையிருப்பு மேலும் வலுப்பெறுவதுடன், கடன் மீள்செலுத்தல் தொடர்பான அரசாங்கத்தின் அபாயங்களும் கணிசமாகக் குறையும் என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
அடுத்த 6 முதல் 12 மாத காலப்பகுதியில் உலகளாவிய எரிசக்தி சந்தையில் காணப்படும் தடைகளுக்கு மத்தியிலும் இலங்கைப் பொருளாதாரம் மீள்திறனுடன் செயற்படும் என எதிர்பார்க்கப்படுவதால், எதிர்கால நோக்கு நிலையான நிலையில் பேணப்பட்டுள்ளது.
எனினும், அரசாங்கத்தின் நிதி மற்றும் வெளிநாட்டுத் துறை நிலைமைகள் கணிசமாகப் பலவீனமடைந்து, நிதியளிப்பு மற்றும் திரவத்தன்மை தொடர்பான அழுத்தங்கள் மீண்டும் ஏற்பட்டால் கடன் தரப்படுத்தல் குறைக்கப்படலாம் என S&P Global Ratings எச்சரித்துள்ளது.
மறுபுறம், அரச வருமானத்துடன் ஒப்பிடுகையில் வட்டி செலவுகள் கணிசமாகக் குறைதல், வெளிநாட்டுக் கடன் நிலைமை மேலும் வலுப்பெறுதல் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் அரசாங்கத்தின் நிகரக் கடன் அதிகரிப்பு தொடர்ச்சியாக சுமார் 3 சதவீத மட்டத்தில் பேணப்படுதல் போன்ற காரணிகளின் அடிப்படையில் எதிர்காலத்தில் கடன் தரப்படுத்தலை மேலும் உயர்த்த முடியும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
