யாழ்ப்பாணத்தில் காணாமல் போன அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் தொடர்பான வழக்கில் மேலதிக சாட்சியங்களை வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று (27) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார்.
குறித்த வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை இன்று வரை ஒத்திவைக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் கடந்த செப்ரெம்பர் 29ஆம் திகதி உத்தரவிட்டிருந்தது.
2011ஆம் ஆண்டு டிசம்பர் 09ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இந்த இரு அரசியல் செயற்பாட்டாளர்களும் காணாமல் போன நிலையில், அப்போது பாதுகாப்புச் செயலாளராகக் கோட்டாபய ராஜபக்ச கடமையாற்றினார்.
கடந்த செப்டம்பர் 29ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்திலிருந்து காணொளித் தொழில்நுட்பம் ஊடாக யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்திற்குச் சாட்சியமளித்திருந்தார்.
குறித்த சம்பவம் இடம்பெற்றுப் பல வருடங்கள் கடந்துவிட்டமையால், சில விடயங்கள் தமக்கு நினைவில் இல்லையென அவர் அப்போது குறிப்பிட்டிருந்தார்.
இதற்கமைய, முன்னாள் ஜனாதிபதியிடம் மேலதிக சாட்சியங்களை விசாரிக்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
