வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட உளுந்து வடையொன்றில் முழு கரப்பான் பூச்சி ஒன்று காணப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நுகர்வோர் ஒருவர், சமூக வலைதளங்களில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன், வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த நுகர்வோர் இது குறித்துத் தெரிவிக்கையில்,
தாம் வாங்கிய உளுந்து வடையை தனது தாய் சாப்பிட முற்பட்டபோது, அதன் உள்ளே ஒரு முழு கரப்பான் பூச்சி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது வெறும் பூச்சியின் பாகங்கள் அல்ல, மாறாக ஒரு முழு கரப்பான் பூச்சி வடையினுள் பொரிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உணவகங்களின் இவ்வாறான தரம் குறைந்த மற்றும் சுகாதாரமற்ற செயல்பாடு பொதுமக்களின் ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும், குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இவ்வாறான உணவுகளை உட்கொண்டால் பாரிய உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொது சுகாதார அதிகாரிகள் இது குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
