தமிழரசுக் கட்சியில் வெடித்தது புதிய சர்ச்சை: யாழ் மாவட்ட புதிய நிர்வாகத் தெரிவுக்கு எதிராக இளைஞர் அணித் தலைவர் கடிதம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட கிளை மற்றும் தொகுதிக்கிளைகளுக்கான புதிய நிர்வாகத் தெரிவுகள், கட்சியின் யாப்பு விதிகளுக்கு முரணான வகையிலும் முறைகேடான முறையிலும் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறி, அக்கட்சியின் யாழ் மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கந்தசாமி பிருந்தாபன் உத்தியோகபூர்வமாக முறையிட்டுள்ளார்.

இது தொடர்பாக, வலுவான காரணங்கள் மற்றும் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கும், மத்திய குழுவின் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் அவர் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அவரது கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 4 முக்கிய குற்றச்சாட்டுகள் வருமாறு:

  1. காங்கேசன்துறை தொகுதி நிர்வாகத் தெரிவில் முறைகேடு:
    கடந்த 2025 அக்டோபர் 21 அன்று, காங்கேசன்துறைத் தொகுதிக்கான நிர்வாகத் தெரிவு யாப்பு விதிகளுக்கு முரணாக நடத்தப்பட்டுள்ளது. மாவட்டத் தலைவர் மற்றும் செயலாளருக்குத் தெரியாமலும், ஏற்கனவே இயங்கிவரும் தொகுதி நிர்வாகத்திற்கு அறிவிக்காமலும், கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளரால் குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் மட்டும் அழைக்கப்பட்டு இந்தத் தெரிவு நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து தொகுதி நிர்வாகிகள் ஏற்கனவே கட்சியிடம் உத்தியோகபூர்வமாக முறையிட்டுள்ளனர்.
  2. வட்டுக்கோட்டைத் தொகுதி தெரிவில் யாப்பு மீறல்:
    கடந்த 2026 ஏப்ரல் 23 அன்று, வட்டுக்கோட்டைத் தொகுதியில் ‘வெற்றிடம் நிரப்புதல்’ என்ற பெயரில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது. இதன்போதும் மாவட்டத் தலைவர், செயலாளருக்கு அறிவிக்கப்படாமல், பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளரால் குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் தொலைபேசி மூலம் அழைக்கப்பட்டுள்ளனர். பிரதேச சபை உறுப்பினர்களைக் கொண்டும், காரைநகர் பிரதேசத்தையும் இணைத்தும் நடத்தப்பட்ட இந்தத் தெரிவு யாப்பு விதிகளுக்கு முரணானது என ஊடகங்களில் செய்திகள் வெளியானதோடு, தொகுதி உறுப்பினர்களும் கட்சி நிர்வாகத்திற்கு முறையிட்டுள்ளனர்.
  3. யாழ் மாவட்ட கிளையின் அராஜகமான அதிகார துஷ்பிரயோகம்:
    கடந்த 2026 மே 31 அன்று, யாழ் மாவட்ட கிளை உத்தியோகத்தர் தெரிவுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் இல்லாத நிலையில், கட்சியின் பதில் பொதுச் செயலாளரே இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கியிருந்தார். இதன்போது, புதிய நிர்வாகத் தெரிவு குறித்து உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் கோரியும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. “தலைமைப் பீடத்தில் (Table) இருந்து தெரிவு செய்யப்பட்டால், அதற்கு எதிராக மறு தெரிவு கோரக் கூடாது” என மிரட்டும் தொனியில் பதில் பொதுச் செயலாளர் எச்சரித்துள்ளார். ஜனநாயகக் கட்சியில் அங்கத்தவர்களின் கருத்துக்களைக் கேளாது நடத்தப்பட்ட இந்த அராஜகமான, ஜனநாயக விரோதச் செயல், ஜனநாயகத்திற்குச் சாவுமணி அடிப்பது போல் அமைந்துள்ளதாக கடிதத்தில் சாடப்பட்டுள்ளது.
  4. நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் முன்னெடுக்கப்பட்ட தெரிவு:
    கடந்த தலைவர் தேர்தலின் போது, ‘தொகுதி’ என்பது ‘பிரதேச ரீதியானது’ என மத்திய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டு, வலிகாமம் தென்மேற்கு மற்றும் வலிகாமம் தெற்கு என இரு பிரதேச பிரிவுகளாக பொதுச்சபைக்கு தலா 5 பேர் வீதம் (மொத்தம் 10 பேர்) தெரிவு செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது. இந்த நிர்வாக நடைமுறைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில், நீதிமன்ற வழக்கை மதிக்காமல், ஏற்கனவே பிரதேச பிரிவாக இருந்த நிர்வாக முறையை தற்போது மீண்டும் ‘தொகுதி’ என ஒன்றாக இணைத்துத் தெரிவு செய்தமை எந்த அடிப்படையில்? யாருடைய தீர்மானம்? என்ற கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பு விதிகளையும், ஜனநாயகப் பண்புகளையும் பாதுகாக்கும் பொருட்டே இந்த ஆட்சேபனைக் கடிதத்தை மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களிற்கு அனுப்பியுள்ளதாக யாழ் மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கந்தசாமி பிருந்தாபன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது கட்சியின் உள்மட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

namal rajapaksa
கிளிநொச்சியில் இளம் கலைஞர் கைது: அரசின் இரட்டை நிலைப்பாட்டைச் சாடும் நாமல் ராஜபக்ஷ!
vavuniya
மாணவர்கள் மீது கொடூரத் தாக்குதல்: வவுனியா 'சிறுவர் பாதாளக் குழு' சிக்கியது! 7 பேருக்கு நீதிமன்ற உத்தரவால் சிறுவர் இல்லத்தில் அடைப்பு!
arrest
எழுச்சி பாடல்களை பாடி சமூக ஊடகங்களில் பகிர்ந்த கிளிநொச்சி சொல்லிசை கலைஞன் கைது!
vavuniya accident
கனகராயன் குளத்தில் இடம்பெற்ற விபத்தில் முன்னாள் யாழ் மாவட்ட அரச அதிபரின் மகன் உட்பட இரு இளைஞர்கள் உயிரிழப்பு.!
chennai srilankan girl death
சென்னை கோயம்பேடு கொடூரம்: காரில் மோதி இலங்கை பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறுமியும் பலி
gotabaya rajapaksa
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் - கோட்டாபய உள்ளிட்ட மூவருக்கு வெளிநாட்டு பயணத்தடை