அக்குரேகொட சம்பவம்: கொலைக்கு நட்பா காரணம்?

அக்குரெகொடையில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகன தரிப்பிடத்தில், சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் இனந்தெரியாத இருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல திடுக்கிடும் தகவல்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இந்த இரட்டைக் கொலைக்கு முன்னர், துப்பாக்கிதாரிகள் இருவரையும் தங்கும் விடுதிகளுக்கு அழைத்துச் சென்ற கொட்டாவையைச் சேர்ந்த ஜனக என்பவர் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் இருக்கும் ‘மல்வானே டுடு’ என்ற குற்றவாளியின் அறிவுறுத்தலின் பேரில், இந்த நபரே துப்பாக்கிதாரிகளை தங்கும் விடுதிகளுக்கு அழைத்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் போலிப் பெயர்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு தங்குமிட வசதிகளைச் செய்து கொடுத்துள்ளார்.

‘ஐஸ்’ போதைப்பொருளுக்கு அடிமையான இவர், மல்வானே டுடுவின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவருடன் சேர்த்து, இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் இதுவரை ஒரு துப்பாக்கிதாரி உட்பட 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பலாங்கொட, தெல்துவ பகுதியில் உள்ள கறுவாத் தோட்ட காணி ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சுனில் ரஞ்சித் என்ற துப்பாக்கிதாரி, விசாரணைகளின் போது முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

தாம் இராணுவத்தில் இருந்த காலத்தில் கரந்தெனிய சுத்தாவை அடையாளம் கண்டதாக அவர் கூறியுள்ளார்.

அக்காலகட்டத்தில் கரந்தெனிய சுத்தாவும் இராணுவப் பயிற்சியில் இருந்துள்ளார்.

இராணுவத்திலிருந்து விலகிய பின்னர் திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு விளக்கமறியலில் இருந்தபோது, கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் விளக்கமறியலில் இருந்த கரந்தெனிய சுத்தாவை மீண்டும் சந்தித்து நண்பராகியுள்ளார்.

சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி இப்போது எனது வழக்குகளுக்காக ஆஜராவதில்லை. அவர் ‘லோகு பெட்டி’யின் வழக்குகளுக்கே ஆஜராகிறார். எனவே அவரை முடிக்க வேண்டும் என கரந்தெனிய சுத்தா தம்மிடம் கூறியதாக துப்பாக்கிதாரி தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணியை மாத்திரமன்றி அவரது மனைவியையும் கொலை செய்யுமாறு கரந்தெனிய சுத்தா தமக்கு உத்தரவிட்டுள்ளார். தாக்குதலுக்குச் செல்வதற்கு முன்னரும் தாம் ஹெரோயின் உட்கொண்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட காரின் சாரதி யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. துப்பாக்கிதாரிகள் இருவரும் சாரதியும் ஒருவரையொருவர் அறியாதவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

கொலையின் பின்னர் துப்பாக்கிகள் வேறு வாகனத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.

கொலைக்குப் பின்னர் கொட்டாவையிலிருந்து பஸ்ஸில் தெஹிவளைக்குச் சென்று, அங்கிருந்து அம்பலாங்கொடவுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

தாம் எங்கு மறைந்திருக்க வேண்டும் என கரந்தெனிய சுத்தாவவிடம் கேட்டபோது, சரியான இடம் இல்லை, எங்காவது ஓரிடத்தில் இரு என அவர் பதிலளித்துள்ளார்.

இதனையடுத்தே அவர் நண்பர் ஒருவரின் தோட்டத்தில் வேலை செய்துகொண்டு தலைமறைவாகியுள்ளார்.

சந்தேகநபரான துப்பாக்கிதாரியை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

colombo gun shoot
அக்குரேகொட இரட்டை கொலை தொடர்பான ஆதாரங்களை அழித்த சந்தேகநபர்கள்!
Rishad Bathiudeen
ரிஷாட் பதியுதீன் வீட்டில் உயிரிழந்த சிறுமி விவகாரம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
dfsdfsd
Massive Protest Meeting in Kilinochchi Against Political Retaliation Targeting MP S. Shritharan
central bank of sri lanka
இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!
gun shoot colombo
அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
vehicle import
இலங்கையில் வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான முக்கிய தகவல்!