தேசிய பாடசாலை அந்தஸ்த்து ரத்து! இலங்கை அரசின் அதிரடி!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகார காலத்தில் வழங்கப்பட்ட 671 பாடசாலைகளில் தேசிய பாடசாலை உயர்வு அந்தஸ்து இரத்துச்செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கம் இதற்கான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

இத்திட்டத்தில் ஒரு பாடசாலைக்கு இரண்டு மில்லியன் ரூபாய் நிதியை அப்போது அப்போதைய அரசாங்கம் வழங்கியது.

அத்துடன், ஒவ்வொரு பாடசாலைக்கும் வழங்கப்பட்ட இரண்டு மில்லியன் ரூபாவை ஒதுக்கி பாடசாலைகளுக்கான பெயர்ப்பலகைகளை அமைப்பதற்கும் அவசரத்திருத்த வேலைகளுக்கும்
பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், மேற்கூறிய தேசிய பாடசாலை அந்தஸ்து தற்போது நீக்கப்படுவதுடன், அவை இதற்கு முதலிருந்த
மாகாண சபை பாடசாலைகளாகவே இயங்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

அன்றைய அரசின் அறிவுரைக்கமைய மேற்படி ஒவ்வொரு பாடசாலையும் தேசிய பாடசாலை பெயர்ப்பலகைக்காக 5 இலட்சத்திற்கும் அதிகமான பணத்தைச் செலவிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது

எனவே, இப்பெயர்ப் பலகையை அகற்றுவதுடன், தேசிய பாடசாலை பெயரில் தயாரிக்கப்பட்ட கடிதத்தலைப்பு மற்றும் பெயர் முத்திரைகளையும் அகற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1,000 தேசிய பாடசாலைகளை நாட்டில் உருவாக்கும் திட்டத்திற்கிணங்க கோட்டாபய அரசாங்கம் இத்தேசிய பாடசாலை திட்டத்தை அறிமுகம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆயிரம் தேசிய பாடசாலைகள் வேலைத்திட்டம் ஆரம்பம்
அன்றைய கோத்தபாய அரசின் செய்தி

  • பாடசாலை அல்லது பல்கலைக்கழகக் கல்வியை முடித்துக்கொண்டு வெளியேறும் சகல மாணவர்களும் திறமைவாய்ந்தவர்களாக இருக்கும் கல்வி முறையை ஏற்படுத்துதல் …
  • நாட்டின் எதிர்காலத்துக்காக, அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் குழுவாகப் பணியாற்ற வேண்டும்…
  • மக்களுக்காக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டியது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கடமையாகும்…
  • தீர்மானங்களை எடுக்கும்போது அதிகாரிகள் செயற்படும் முறையை மாத்திரம் பார்க்க வேண்டும்…
    – நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவிப்பு.

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டவாறு மேலும் ஒரு திட்டத்தை யதார்த்தமாக்கும் வகையில், ஆயிரம் பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

மொனராகலை – சியம்பலாண்டுவ மஹா வித்தியாலயம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில், இன்று (07) முற்பகல் தேசிய பாடசாலையாக மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

எதிர்காலத்துக்குப் பொருத்தமான திறமைவாய்ந்த சந்ததிகளை உருவாக்க, கல்விக் கட்டமைப்பில் கொள்கை ரீதியான தீர்மானங்கள் மற்றும் பல மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது, 374 தேசிய பாடசாலைகள் உள்ளன. இந்த எண்ணிக்கை, நாட்டிலுள்ள மொத்த பாடசாலைகளில் 3.6% சதவீதம் ஆகும்.

இந்நிலையில், சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அளவுகோல்களைக் கருத்திற்கொண்டு, விஞ்ஞானப் பொறிமுறையில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளைத் தேசிய பாடசாலைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும்போது, சகல திறமைகளுடன் கூடிய பிள்ளைகளாக அவர்கள் வெளியேற வேண்டும். அதற்கேற்றவாறான கல்வி முறைமை, ‘சுபீட்சத்தின் நோக்கு’ கல்வி மறுசீரமைப்பின் மூலம் நிறைவேற்றப்படும் என்று ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு குழந்தைக்கும் தகவல் தொழில்நுட்ப அறிவை வழங்கி, தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய தொழிற்படையாக முன்னோக்கிச் செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்காக, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரு குழுவாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

ஏற்படும் பின்னடைவுகளை, ஒரு குழுவாக எதிர்கொள்வது கூட்டுப் பொறுப்பாகும். அவ்வாறு செய்யாமல், குறைகளை மட்டும் விமர்சிப்பது சம்பந்தப்பட்டவரின் திறமையின்மையே ஆகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

கொவிட் தொற்றுப் பரவல் காரணமாக இழந்த இரண்டு வருடங்களைப் பற்றி சிந்திக்காமல், உறுதியளிக்கப்பட்ட பொறுப்புகளை அடுத்த மூன்று வருடங்களுக்குள் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக, ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார்.

ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும், அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் பதவியை எதிர்பார்க்கிறார்கள். எவ்வாறாயினும், அரசியலமைப்பின் மூலம் வழங்கக்கூடிய 30 அமைச்சுப் பதவிகளுக்கு மேலதிகமாக எந்தவொரு அமைச்சுப் பதவியையும் வழங்கி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை மீறப் போவதில்லை எனவும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

மக்களுக்காக எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு உதவுவது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடமை எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள், தீர்மானங்களை எடுக்கும்போது அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை மட்டும் பாருங்கள் என்றும் அவ்வாறில்லாமல் சுற்றறிக்கைகளின் மூலம் எவ்வாறு வேலைசெய்யாதிருப்பதெனப் பார்க்க வேண்டாம் என்றும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் மூன்று வருடங்களுக்கு முழு ஆதரவை வழங்குமாறு, அனைத்து அரச ஊழியர்களுக்கும் ஜனாதிபதி அவர்கள் அழைப்பு விடுத்தார்.

மக்களுக்கான வலுவான அரச சேவையை உருவாக்குவதற்காக, எதிர்காலத்தில் அரச நிறுவனங்களுக்கு நேரில் சென்று பார்வையிடவுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், ‘கிராமத்துடன் கலந்துரையாடல்’ நிகழ்ச்சித்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு மக்களின் அபிலாஷைகள் விரைவில் நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

1,000 தேசிய பாடசாலைகள் வேலைத்திட்டம், இலவசக் கல்வி வரலாற்றில் ஒரு மைல் கல்லாக வரலாற்றில் இடம்பெறும் எனத் தெரிவித்த கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்கள், இது, அறிவுசார் கல்விக்கான ஒரு புரட்சியின் ஆரம்பம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போது இலங்கையானது, கல்வியில் தேசிய அபிலாஷைகளை நோக்கி நகர்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கான ஒதுக்கீட்டை 4.5% சதவீத்திலிருந்து 7.2% சதவீதம் வரை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, இந்நிகழ்வில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

குறைந்தளவு வசதிகள் இருந்தும், ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் மொனராகலை மாவட்டமானது கல்வியில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட கல்விக் கொள்கையும் இதற்குக் காரணமாக இருந்ததென்றும் ஷசீந்திர ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார்.

சவால்கள் இருந்த போதிலும், கல்விக்கான அர்ப்பணிப்பையும் செலவினத்தையும் விட்டுக்கொடுக்காமல் கல்விக்கு உயிர் கொடுக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் இது, வளப் பகிர்வில் உள்ள முரண்பாடுகளினால் கடந்த காலத்தில் ஏற்பட்ட தவறுகளை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட அவர்கள் தெரிவித்தார்.

கிராமப்புறங்களில் கவனத்திற்கொள்ளப்படாத பாடசாலைக் கட்டமைப்பை உயிர்ப்பித்து, பிள்ளைகளின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதாகவும் அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைவரதும் பொறுப்பாகும் எனவும், இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த அவர்கள் தெரிவித்தார்.

மொனராகலை – சியம்பலாண்டுவ மஹா வித்தியாலயத்தை தேசிய பாடசாலையாக மாற்றுவதற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தை, அந்தப் பாடசாலையின் அதிபர் திருமதி இந்துமதி பரணமானவிடம் ஜனாதிபதி அவர்கள் கையளித்தார்.

மொனராகலை மாவட்டத்திலுள்ள 62 பாடசாலைகளுக்கு 88 தொலைக்காட்சிப் பெட்டிகள் விநியோகிக்கப்பட்டதை அடையாளப்படுத்தும் வகையில், ஐந்து பாடசாலைகளின் அதிபர்களுக்கு தலா 05 தொலைக்காட்சிப் பெட்டிகளை ஜனாதிபதி அவர்கள் கையளித்தார். அத்துடன், 2022ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்குரிய சீருடை மற்றும் பாதணிகளுக்கான வவுச்சர்களையும் வழங்கினார்.

அதிபர் இந்துமதி பரணமான, ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றைக் கையளித்தார்.

மொனராகலை, சியம்பலாண்டுவ மஹா வித்தியாலயத்தில் அமைந்துள்ள மஹிந்தோதய தொழில்நுட்ப ஆய்வுக்கூடம், கணினித் தொழில்நுட்பக் கற்றல் நிலையம் என்பவற்றைப் பார்வையிட்ட ஜனாதிபதி அவர்கள், அப்பாடசாலையை தேசிய பாடசாலையாக மாற்றியமை மற்றும் தனது வருகை தொடர்பில் பதிவு புத்தகத்தில் பதிவிட்டார்.

மஹா சங்கத்தினர், ஏனைய மதத் தலைவர்கள், ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸாநாயக்க, தேனுக விதானகமகே, பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் புஸ்பகுமார, குமாரசிறி ரத்நாயக்க, கயாஷான் நவனந்தன ஆகியோருடன் மக்கள் பிரதிநிதிகள், கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, மேலதிகச் செயலாளர் ஹேமந்த பிரேமதிலக உள்ளிட்ட செயலாளர்கள், தேசிய பாடசாலைகள் பணிப்பாளர் கித்சிறி லியனகமகே மற்றும் அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

மொனராகலை – சியம்பலாண்டுவ மஹா வித்தியாலயத்துக்குச் சென்றுகொண்டிருந்த ஜனாதிபதி அவர்கள், வழியில் கூடியிருந்த விவசாயிகளைச் சந்தித்தார். அவர்களிடம், பயிர்ச் செய்கைகள் தொடர்பில் கேட்டறிந்த ஜனாதிபதி அவர்கள், தொழில்நுட்ப அறிவுடன் சேதனப் பசளையை எவ்வாறு உற்பத்தி செய்வது மற்றும் விவசாயத்துக்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் போதிய விழிப்புணர்வு இல்லாமையால், ஒரு சில குறைபாடுகள் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

எதிர்காலச் சந்ததியினருக்கு நஞ்சற்ற உணவை வழங்குவதற்காக, நாட்டில் பசுமை விவசாயத்தை உருவாக்குவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி அவர்கள் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டார்.

youtube

Related Posts :

Special News :

Entertainment :

Special News

school
பாடசாலையில் மாணவனின் அடாவடியால் ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதி!
New Project t (5)
110 வயதான இலங்கையின் மிக வயதான நபர்!
New Project t (3)
பாடசாலை கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் பலர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
New Project t (2)
நாளை முதல் அமுலுக்கு வரும் முக்கிய நடைமுறை!
New Project t (27)
கிளிநொச்சியில் குண்டு வெடிப்பு: இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
New Project t (26)
பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!