தான் எதிர்த்த சட்டத்தின் கீழேயே ஊடகங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார் சாணக்கியன்: வலுக்கும் விமர்சனங்கள்

நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், தமிழ் ஊடக நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தனது கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய ‘நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின்’ (Online Safty Act) கீழ் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். தான் கடுமையாக எதிர்த்த ஒரு சட்டத்தைப் பயன்படுத்தியே அவர் விமர்சனங்களை முடக்க முற்படுவதாகக் கூறி மக்கள் மத்தியிலும் அரசியல் தளத்திலும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தன்மீது அவதூறு பரப்பப்படுவதாகக் கூறி, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தின் 24ஆம் பிரிவின் கீழ் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த விண்ணப்பம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ் ஊடகங்களில் வெளியான நேர்காணல்கள் மற்றும் அரசியல் விமர்சன நிகழ்ச்சிகளைத் ‘தடைசெய்யப்பட்ட கூற்றுக்களாக’ கருதி, அவற்றைத் தடை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, சமூக வலைத்தளங்களில் தன்மீது அரசியல் விமர்சனங்களை முன்வைத்ததாகக் கூறி 23 தனிநபர்களுக்கு எதிராகவும் இதே சட்டத்தின் கீழ் மற்றுமொரு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவர்களில் பெருமளவானோர் அவர் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டபோது, இலங்கை தமிழரசுக் கட்சியும், குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் அதனை கடுமையாக எதிர்த்திருந்தனர். கடந்த 2024 சனவரி 24ஆம் திகதி நாடாளுமன்ற விவாதத்தில் உரையாற்றிய சாணக்கியன், “இந்தச் சட்டம் தமிழ் மக்களுக்கு மிகவும் ஆபத்தானது. இது தமிழ் மக்களை ஒடுக்கும் நோக்கம் கொண்டது. போராட்டம், கடையடைப்பு, அரசாங்கத்திடம் நியாயம் கேட்பது மற்றும் அரசாங்கத்தின் மீதான விமர்சனங்கள் கூட இனிவரும் காலங்களில் குற்றமாக இந்தச் சட்டத்தின் கீழ் எடுத்துக் கொள்ளப்படலாம்” என பகிரங்கமாக எச்சரித்திருந்தார். தான் எதிர்த்த அதே சட்டத்தை அவர் தற்போது பயன்படுத்துவது அவரது இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுவதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நிகழ்நிலைக் காப்புச் சட்டமானது சனநாயக வெளிக்கும், கருத்துச் சுதந்திரத்திற்கும் பாரிய அச்சுறுத்தல் என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணிமனை, சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் ஏற்கனவே தமது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன. இவ்வாறு சர்வதேச மட்டத்தில் விமர்சிக்கப்பட்ட ஒரு சட்டத்தை, அதனையெதிர்த்த மக்கள் பிரதிநிதி ஒருவரே பயன்படுத்துவது பேசுபொருளாகியுள்ளது.

தனிப்பட்ட ரீதியில் களங்கம் ஏற்பட்டால், சாதாரண அவதூறுச் சட்டங்களின் கீழ் சட்ட நடவடிக்கை எடுப்பதற்குப் போதிய ஏற்பாடுகள் உள்ள நிலையில், கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை சாணக்கியன் தெரிவு செய்தமை பொதுமக்களால் விமர்சிக்கப்படுகிறது. பொது வாழ்வில் உள்ள அரசியல்வாதிகள் மீதான விமர்சனங்கள் மக்கள் பங்கேற்பு சனநாயகத்திற்கு அவசியமானவை. அரசியல் விமர்சனங்களை குற்றமாக்க முனையும் இத்தகைய நடவடிக்கைகள் சனநாயக வெளியை நசுக்கும் செயல் என்றும், விமர்சனங்களுக்கும் தனிப்பட்ட அவதூறுகளுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கையாள்வதில் சாணக்கியனின் அரசியல் முதிர்ச்சியற்ற தன்மையே வெளிப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் பலத்த கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

sajith premadasa
இலங்கை கடற்பரப்பில் மற்றுமொரு ஈரானிய கப்பல்?அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் சஜித்!
Commander Buddhika Sampath
இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீது தாக்குதல்: நிராகரித்தது கடற்படை!
iran war ship
இலங்கை கடற்பரப்பில் ஈரானிய போர் கப்பல் மீது நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல்?
jaffna news
யாழில் காணாமல் போன மீனவர்கள் - கடற்படையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எழுந்துள்ள குற்றச்சாட்டு!
gold price
இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள சடுதியான வீழ்ச்சி!
iran ship
விபத்துக்குள்ளான ஈரான் கப்பல்! மீட்கப்பட்டோர் கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு