எம்முடனான முரண்பாட்டை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன். அதுபோன்று சம்பந்தமான விடயங்களை நீதி செய்ய வேண்டிய பொறுப்பை மக்களிடம் கையளிக்கிறேன் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே சி.வீ.கே.சிவஞானம் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
சமூக ஊடகங்கள் நீதியுடன் நியாயமாக நடக்க வேண்டும் அவர்கள் இடுகின்ற தலைப்புகள் சொந்த வாழ்க்கையில் ஒருவரின் கௌரவத்தையும் பாதிப்பதாக இருக்கக்கூடாது என்பதால் நியாயமாக தலைப்பிட்டு செய்தியை வெளியிடுங்கள். எனக்கு மட்டுமில்லை எல்லோருக்கும் இது பொதுவானது.
செம்மணி அணையா விளக்கு போராட்டம் தொடர்பில் இளைஞர்கள் எடுத்த முயற்சி வரவேற்கத்தக்கது என்ற அடிப்படையில் முதன் முதலில் கட்சியின் உள்ளூராட்சி உறுப்பினர்களை பங்கேற்க அழைத்தது நான். அதன் அடிப்படையில் போராட்டத்திலும் பங்கேற்றோம்.
அதன்போது வேலன் சுவாமி விமர்சித்தார். அதில் என்னை பேச அழைத்தார்கள். நான் திருப்பி ஏதாவது பேசி இருந்தால் அந்த போராட்டத்தின் நோக்கம் குழம்பிவிடும் என்பதால் அதனை நான் செய்யவில்லை.
நேற்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் செம்மணி அணையா விளக்கு போராட்டத்திற்கு ஆதரவாக தீப்பந்த போராட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதனை யாழ்ப்பாண மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
நாம் செம்மணி அணையா விளக்கு போராட்டத்துக்கு சென்றபோது அஞ்சலி செலுத்தி மக்களோடு மக்களாக நாங்கள் நின்று இருந்தோம். 15 நிமிடங்களுக்குப் பிறகு அமைதியாக நாங்கள் வெளியேறினோம்.
நான் வெளியேறி வீதியில் சென்று வாகனத்தில் ஏற முற்பட்டபோது சில குரல்கள் எனக்கு எதிராக எழுந்தது. அதனை நான் அசட்டை செய்யவில்லை. பின்னால் சில பேர் சத்தமிட்டனர். அந்த காணொளியை
நான் அவதானித்த பொழுது என்னை குறி வைத்து திட்டமிட்டு பேசியதை அவதானிக்க முடிந்தது.
எமது கட்சிக்கு எதிராக கடந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட காரணத்தினால் மத்திய செயற்குழுவின் தீர்மானத்திற்காக ஒருவரை கட்சியிலிருந்து நீக்கி இருந்தோம். அந்த பழைய குழப்பங்களையே அவர்கள் பேசியிருக்கிறார்கள்.
காணொளியை பார்த்தால் தெரியும். நான் சலனம் இல்லாமல் நடந்து சென்றேன். நான் ஓடவில்லை.
தமிழ் அரசுக் கட்சித் தலைவர் விரட்டியடிக்கப்பட்டதாக செய்தி வந்தது. என்னை யாரும் விரட்டியடிக்கவில்லை. அகற்றப்பட்டார் என்ற செய்தி வந்தது. நான் அகற்றப்படவில்லை. எதுவுமே இல்லை. ஏன் இவ்வாறு செய்தியை போட்டார்கள் என்று எனக்கு விளங்கவில்லை. உண்மையை எழுத வேண்டும். எனது பாட்டில் நான் வெளியேறி சென்றேன்.
இவ்வாறான செய்திகள் எழுதும் பொழுது அது எம்மை பாதிக்கிறது. உண்மையில் அவ்வாறு நடந்தால் பரவாயில்லை.
நாங்கள் இருந்த இடத்தில் நூறுக்கும் மேற்பட்ட மக்கள் இருந்தார்கள். ஒருவர் கூட எமக்கு எதிராக குரல் எழுப்பவில்லை. நல்ல ஒரு விடயமொன்றிற்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஆதரவு அளிக்க வேண்டும் என்பதற்காகவே நாம் அங்கு பங்கேற்று இருந்தோம்.
உள்ளூராட்சி தேர்தலில் நிமிர்ந்து நிற்கின்ற கட்சி என்ற வகையில் தமிழ் அரசுக் கட்சிக்கு பொறுப்பு இருக்கிறது. அந்த கடமையை செய்வதற்காக நாம் போய் இருந்தோம்.
வீதியில் சென்றால் நாய்கள் குலைப்பது வழமை. நான் அவ்வாறு சென்றேன் அவ்வாறே அதுவும் நடந்தது. அது பரவாயில்லை.
ஏற்பாட்டாளர்கள் பல முயற்சிகளை எடுத்தார்கள். அவர்களை நான் பாராட்டுகிறேன். மக்கள் இதனை கண்டிக்க வேண்டும். மக்களுக்கு பொறுப்பு இருக்கிறது.
காணாமல் போன விடயம் தொடர்பாக நான் பல விடயங்களை செய்திருக்கிறேன். அதை நான் ஒன்றும் சொன்னதில்லை. 1996 ஆம் ஆண்டு தொடக்கம் இந்த விடயங்களை நான் கையாண்டு இருக்கிறேன். கிரிசாந்தியின் கொலை நடந்த சமயத்தில் ரஜிணி என்ற பெண் பிள்ளையை ராணுவம் கொலை செய்து மலக்குளியில் போட்ட விடயத்தை மிகவும் கடுமையான ராணுவ தளபதி என்று சொல்லக்கூடிய ஜானக பெரேராவோடு முரண்பட்டு நின்று சடலத்தை மலக்குழியில் இருந்து எடுத்து இரண்டு ராணுவத்தினரை சேவை இடைநிறுத்தம் செய்து வைத்தேன். தயவுசெய்து அந்த காலத்தில் பத்திரிகைகளை பார்த்தால் தெரியும். அவ்வாறு பல விடயங்களை செய்து இருக்கிறேன் இதனை பிதற்றிக் கொண்டு நான் திரிவதில்லை.
அந்த இடத்தில் நிற்பதற்கு எனக்கும் கட்சிக்கும் உரிமை இருக்கிறது. அதை தடுப்பதற்கு கட்சியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் குழுவாக வந்து அந்த இடத்தில் புனித தன்மையும் புனித நோக்கத்தை சிதைக்கிற காழ்ப்புணர்ச்சியான செயல் கண்டிக்கத்தக்கது. மக்களுக்கு ஒரு பங்கு உண்டு. இவர்கள் இவ்வாறு அசிங்கமாக அவமானமாக செயல்பட்டால் இனிமேல் இவ்வாறான போராட்டங்களில் மக்களை பங்கு வைக்காமல் வைப்பதற்கான நோக்கம் உண்டா என்ற சந்தேகம் உண்டு.
எனக்கும் பொதுச்செயலாளருக்கும் கட்சிக்கும் அவர்களுடன் முரண்பாடு உண்டு. அதை வைத்து புனிதமான முயற்சியை அசிங்கப்படுத்திய செயலை கட்சி சார்ந்து கண்டிக்கிறேன். அதுபோன்று சம்பந்தமான விடயங்களை நீதி செய்ய வேண்டிய பொறுப்பை மக்களிடம் கையளிக்கிறேன் – என்றார்