ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் நேற்று 8.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக ரஷ்யா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தின் போது கம்சட்கா பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடந்த சம்பவம் தற்போது உலகம் முழுவதும் பேசப்படுகிறது. மருத்துவமனையின் அறுவை சிகிச்சை அறை அதிர்வுகளால் குலுங்கிக்கொண்டிருந்த போதிலும், மருத்துவர்கள் எந்த வித பீதியுமின்றி அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர். அந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நிலநடுக்கம் ஏற்பட்ட சமயம் மருத்துவமனை கட்டிடம் கடுமையாக அதிர்ந்தது. அப்போது அறுவை சிகிச்சை அறையில் இருந்த மருத்துவ ஊழியர்கள் ஸ்ட்ரெச்சரை பலத்ததாகப் பிடித்து நோயாளி பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்தனர். மருத்துவர்கள் மனஅழுத்தமின்றி சிகிச்சையை தொடர்ந்து முடித்தனர்.
ரஷ்யா சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, அறுவை சிகிச்சை முழுமையாக வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. தற்போது நோயாளி நலமாகக் குணமடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.