நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல பகுதிகளில் ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனை செய்து வந்த “மஹரகம அக்கா” என்ற பெயரில் அடையாளம் காணப்பட்ட 50 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா காவல்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தில் பல பகுதிகளில் வாடிக்கையாளர்களுடன் ஈஸி கேஷ் வழியாக அவர் பண பரிமாற்றம் செய்து வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதன்படி கைது செய்யப்பட்ட பெண் கடந்த 6 ஆம் திகதி நுவரெலிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அதனை தொடர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் அவருடைய இல்லத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 141,000 ரூபாய் பணம் மற்றும் 32 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து குறித்த பெண்ணை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா காவல்துறையினர் கொண்டு வருகின்றனர்.
