வடக்கு மாகாணத்தின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் முக்கிய மைல்கல்லாக ஸ்மார்ட் மரைன் லங்கா (Smart Marine Lanka) நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை அலுவலகம் அமைகின்றது.
வடக்கு மாகாணத்தின் உற்பத்தியாளர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு உலகளாவிய கப்பற் போக்குவரத்து மற்றும் தளபாடச் சேவைகளை நெருக்கமாகக் கொண்டு வரும் இந்த முயற்சி, வடக்கின் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும், என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

ஸ்மார்ட் மரைன் லங்கா நிறுவனம் தனது யாழ்ப்பாணக் கிளை அலுவலகத்தை இன்று (10.08.2026) திங்கட்கிழமை யாழ்ப்பாணம், கண்டி வீதியில் அமைந்துள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை செயலகத்தின் முதலாம் மாடியில், வடக்கு ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் ஒத்துழைப்புடன் ஆரம்பித்தது.
இதன் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் புதிய அலுவலகத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

வடக்கு மாகாணத்தின் பொருளாதார மறுமலர்ச்சியில் காங்கேசன்துறை துறைமுகத்தின் மீளுருவாக்கமும் அதனூடான கப்பற் போக்குவரத்து வளர்ச்சியும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை எனக் குறிப்பிட்ட ஆளுநர், வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாய, மீன்பிடி மற்றும் சிறு, நடுத்தர தொழில்துறைப் பொருட்களை சர்வதேச சந்தைகளுக்கு விரைவாகவும் போட்டித்தன்மையுடனும் கொண்டு செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதில் இந்நிறுவனத்தின் வருகை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் காரைக்கால் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக திருகோணமலை மற்றும் கொழும்பு நோக்கி முன்னெடுக்கப்படவுள்ள நேரடி பொருட்கள் கப்பற் போக்குவரத்து சேவை, வடக்கு மாகாணத்தின் வர்த்தக நடவடிக்கைகளுக்கு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தும் எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். இதன்மூலம் பொருட்களை குறுகிய காலத்திலும் குறைந்த செலவிலும் கொண்டு செல்லும் வாய்ப்பு உருவாகுவதுடன், வர்த்தகர்களின் செயற்பாட்டுத் திறனும் மேம்படும் என்றார்.
யாழ்ப்பாணத்தில் களஞ்சியசாலைகள், குளிரூட்டப்பட்ட சேமிப்பு வசதிகள் மற்றும் தளபாட மையங்களை அமைக்கும் நிறுவனத்தின் திட்டம் வடக்கு மாகாண விவசாயிகளுக்கு பெரும் நன்மையை வழங்கும். குறிப்பாக மாம்பழம், முருங்கை மற்றும் ஏனைய பழங்கள், காய்கறிகள் போன்ற விரைவில் பழுதடையக்கூடிய விளைபொருட்களை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் பாதுகாத்து, சந்தை விலை உயர்ந்த காலத்தில் விற்பனை செய்வதற்கான வாய்ப்பு இதன்மூலம் உருவாகும் என்பதுடன், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளையும் குறைக்க முடியும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.
இந்தியாவிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் இனி கொழும்பு துறைமுகத்தைச் சாராமல் காங்கேசன்துறை துறைமுகத்தை நேரடியாக வந்தடையும் சூழல் உருவானால், போக்குவரத்து நேரம், கையாளும் செலவு மற்றும் தேவையற்ற தாமதங்கள் கணிசமாகக் குறையும். அதேவேளை, வணிகர்களின் முதலீட்டுச் சுழற்சியும் விரைவடைவதன் மூலம் அதன் நன்மைகள் பொதுமக்களையும் சென்றடையும்.
ஸ்மார்ட் மரைன் லங்கா நிறுவனம், கப்பல் முகவர் சேவைகள், பொருட்கள் போக்குவரத்து சேவைகள், தளபாட முகாமைத்துவம், கப்பல் மற்றும் விமான வழி பொருட்கள் கையாளல், கொள்கலன் சேவைகள், சுங்க அனுமதி மற்றும் ஒருங்கிணைப்பு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை யாழ்ப்பாணத்திலிருந்தே வழங்கவுள்ளது.
இலங்கை, இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் நிறுவனம் கொண்டுள்ள வலையமைப்பின் ஊடாக வடக்கு மாகாணத்தின் வர்த்தகத் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் என நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
வடக்கு மாகாணத்தின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்கும், காங்கேசன்துறை துறைமுகத்தை மையமாகக் கொண்ட பிராந்திய வர்த்தக வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், வடக்கு மாகாணத்தை சர்வதேச கப்பற் போக்குவரத்து மற்றும் தளபாட வலையமைப்புடன் மேலும் வலுவாக இணைப்பதற்கும் இக்கிளை அலுவலகத்தின் ஆரம்பம் ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், வடக்கு ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகிகள், ஸ்மார்ட் மரைன் லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் உள்ளிட்ட நிறுவன அதிகாரிகள், வர்த்தக மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள், ஏற்றுமதியாளர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
