செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் நீதித்துறைக்கும் வெளிப்படுத்த உள்ளதாக சோமரத்ன ராஜபக்சவின் மனைவி தெரிவித்துள்ளார்.

கடந்த ஜுலை மாதம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு பதிலும் கிட்டாததன் காரணமாக, சோமரத்ன ராஜபக்ச மீண்டும் தனது மனைவியின் ஊடாக கடந்த வாரம் ஜனாதிபதிக்கு மற்றுமொரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை விவகாரத்தில் தனது வகிபாகம், தான் உள்ளடங்கலாக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏனைய 5 இராணுவத்தினரும் திட்டமிட்டு சிக்க வைக்கப்பட்டமை.
மற்றும் இவ்விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வகிபாகம் என்பன உள்ளடங்கலாக சோமரத்ன ராஜபக்சவினால் ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திலும், முன்னைய வெளிப்படுத்தல்களிலும் குறிப்பிட்டிருந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், நீதித்துறைக்கும் வெளிப்படுத்துமாறு தனது கணவரான சோமரத்ன ராஜபக்ச வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக அவ்வெளிப்படுத்தல்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி 1996 ஆம் ஆண்டில் வடக்கில் இடம்பெற்ற செம்மணி மனிதப்படுகொலை, வடக்கில் சித்திரவதைக்கூடங்கள் நடாத்தப்பட்ட விதம், அவற்றுடன் தொடர்புடைய இராணுவ உயரதிகாரிகள் தொடக்கம் ஜனாதிபதி வரை அவற்றை செயற்படுத்திய சகல அதிகாரிகளினதும் பெயர் விபரங்கள் போன்றவற்றை இந்நாட்டு மக்கள் தெரிந்து கொள்ளக் கூடியவகையில் வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இவ்விவகாரம் தொடர்பில் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும், சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகளையும் சட்டத்தின்முன் நிறுத்துமாறும், பாதிக்கப்பட்ட யாழ். மக்களுக்கான நீதியை நிலைநாட்டுமாறும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.