சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்தி செயலிகளில் “காவல்துறை அறிவிப்பு” என்ற தலைப்பில் பரவி வரும் செய்தி முற்றிலும் போலியானது என இலங்கை காவல்துறை தெளிவுபடுத்தியுள்ளது.

குறிப்பிட்ட செய்தியில் உள்ள உள்ளடக்கங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் காவல்துறையினரால் வெளியிடப்பட்டவை அல்ல, அவை பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடியவை என்பதால், அதனை உத்தியோகபூர்வ அறிவிப்பாக கருத வேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காவல்துறையின் அதிகாரபூர்வ அறிவிப்புகள் இலங்கை காவல்துறையின் உத்தியோகபூர்வ இணையத்தளம், காவல்துறை ஊடகப் பிரிவின் ஊடக அறிக்கைகள், உறுதிப்படுத்தப்பட்ட காவல்துறையின் சமூக வலைத்தள பக்கங்கள் ஆகியவற்றில் மட்டுமே வெளியிடப்படும்.
அரசாங்க நிறுவனங்களின் பெயரில் வரும் செய்திகளைப் பகிரும் முன்னர் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உறுதிப்படுத்தப்படாத அல்லது தவறான தகவல்களைப் பரப்புவது பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்துவதோடு, பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும்.
நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேண காவல்துறை முழுமையாக அர்ப்பணிப்புடன் உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துல்லியமான மற்றும் உடனுக்குடனான தகவல்களுக்கு காவல்துறையின் உத்தியோகபூர்வ தொடர்பாடல் வழிகளை மட்டுமே பின்பற்றுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
