மட்டக்களப்பில் காதலனின் பணத் தேவைக்காகத் தனது தாயின் தாலிக்கொடியைத் திருடி ஈடுவைத்துப் பணம் பெற்றுக்கொடுத்ததுடன், அந்தத் திருட்டுப் பழியை உறவினர் பெண்ணின் மீது சுமத்திய தனியார் வங்கி ஊழியரான 22 வயது யுவதியை இன்று திங்கட்கிழமை (23) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் 28 ஆம் திகதி தமது வீட்டிலிருந்த 8.5 பவுன் எடையுள்ள தாலிக்கொடி திருட்டுப் போனதாகக் குறித்த வீட்டார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
விசாரணைகளின் போது, தமது வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் உறவினர் பெண் ஒருவரே இதனைத் திருடியிருக்கலாம் என வீட்டார் பொலிஸாரிடம் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.
இதனையடுத்து, சந்தேகத்தின் பேரில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். திருட்டுப் பொருள் எதுவும் மீட்கப்படாத நிலையிலும் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையில், குறித்த பொலிஸ் நிலையத்தின் பெரும் குற்றத்தடுப்புப் பிரிவுக்குப் புதிய பொறுப்பதிகாரியாகப் பொலிஸ் பரிசோதகர் நியமிக்கப்பட்டார்.
அவரது தலைமையில் பொலிஸ் சார்ஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் இந்தத் தாலிக்கொடித் திருட்டு தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தினர்.
இதன்போது, வீட்டின் உரிமையாளரின் மகளான தனியார் வங்கியில் கடமையாற்றும் 22 வயது யுவதியின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பெற்று, நீதிமன்ற அனுமதியுடன் வங்கிகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஜூன் 28 ஆம் திகதி திருடுபோன தாலிக்கொடியை, 30 ஆம் திகதி தனியார் வங்கி ஒன்றில் குறித்த யுவதி தனது அடையாள அட்டையைக் கொடுத்து 14 இலட்சம் ரூபாய்க்கு ஈடுவைத்துப் பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இன்று திங்கட்கிழமை குறித்த யுவதியைக் கைது செய்த பொலிஸார், அவரிடம் முன்னெடுத்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காதலனின் பணத் தேவைக்காகத் தாயின் தாலிக்கொடியைத் திருடி வங்கியில் ஈடுவைத்த யுவதி, அன்றைய தினமே காந்தி பூங்காவில் வைத்துக் காதலனிடம் 14 இலட்சம் ரூபா பணத்தைக் கையளித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த காதலனைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
கைது செய்யப்பட்ட யுவதி இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
