செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விளக்கமளித்துள்ளார்.
குறித்த அறிக்கை மருத்துவ சட்டவியல் அறிக்கை (Medico-Legal Report) அல்ல என்றும், அது தடயவியல் தொல்லியல் அறிக்கை (Forensic Archaeological Report) எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்ட பல கட்ட அகழ்வாராய்ச்சிகளின் மூலம் சுமார் 574 பேரின் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில், பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையில் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சட்ட வைத்திய அதிகாரி மருத்துவர் பிரணவன் செல்லையா, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தடயவியல் அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பேராசிரியர் சோமதேவவின் அறிக்கை மனித எச்சங்கள் எங்கு, எவ்வாறு, எந்தச் சூழ்நிலையில் புதைக்கப்பட்டன என்பதை ஆராய்வதாகும். உயிரிழப்புக்கான காரணம் மற்றும் அதன் தன்மை தொடர்பான முடிவுகள் மருத்துவ சட்டவியல் விசாரணைகள் ஊடாகவே தீர்மானிக்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித எச்சங்கள் தொடர்பான நீதித்துறை தடயவியல் அறிக்கையைத் தயாரிக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான், சட்ட வைத்திய அதிகாரி மருத்துவர் பிரணவன் மற்றும் அவரது குழுவினருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், அந்த நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பேராசிரியர் சோமதேவவின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு நீதவான் தீர்மானம் எடுக்க முடியாது என்றும், ஏனைய தடயவியல் மற்றும் விசாரணை அறிக்கைகளுடன் இணைத்தே அனைத்து விடயங்களும் பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.
குறித்த அறிக்கை தமிழ் சமூகத்துக்கு எதிரான நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் கருத்துகளையும் நிராகரித்த அவர், அது நீதிமன்ற நடவடிக்கைகளுக்குத் தேவையான அறிவியல் தகவல்களை வழங்கும் தொழில்முறை மதிப்பீடு எனத் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணையை ஏற்பாடு செய்ய அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமாக இணக்கம் தெரிவிக்கவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும், நீதிமன்றத்தின் தேவைக்கேற்ப டி.என்.ஏ பரிசோதனை, மனித எச்சங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட தடயவியல் நடவடிக்கைகளுக்கு சர்வதேச தொழில்நுட்ப உதவிகளைப் பெற அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
செம்மணி விசாரணைகளை அரசியல்மயப்படுத்தாமல், இன, மத, சாதி வேறுபாடுகளுக்கு அப்பால் அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் உண்மையைக் கண்டறிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் நீதியமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
