தேசிய சேமிப்பு வங்கியில் இருந்து சிரிலிய சவிய கணக்கிற்கு நன்கொடையாக ஒரு கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டு, அந்த நிதி முறைகேடு தொடர்பிலான வழக்கு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணைப் பிரிவு இது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச சிரிலிய சவிய கணக்கிற்கு தலைமை தாங்குகின்றார்.
கணக்கிற்கு வந்த நிதி, கொழும்பு ரிஜ்வே ஆரியா குழந்தைகள் மருத்துவமனைக்கு CT ஸ்கேன் இயந்திரம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காகவே வரவு வைக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.
CT ஸ்கேனுக்காக நிதி திரட்டப்பட்ட போதிலும், ரிஜ்வே ஆரியா குழந்தைகள் மருத்துவமனைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது, சீன அரசாங்கத்தின் நன்கொடையாக கிடைத்த ஸ்கேன் இயந்திரம் என்பது தெரியவந்துள்ளமையே இந்த விசாரணைக்கான அடிப்படை காரணமாகும்.
தேசிய சேமிப்பு வங்கியின் நிதி நன்கொடையாக சிரிலிய சவிய கணக்கிற்கு வரவு வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வங்கி அதிகாரிகளிடமும், அப்போதைய பணிப்பாளர் சபையிடமும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.
சிரிலிய சவிய அமைப்பினால் எழுத்துமூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கமைய குறித்த நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளமை இதன்போது தெரியவந்துள்ளது.
சிரிலிய சவிய அமைப்பால் பேணப்பட்டு வரும் சிதுவெல்லவில் அமைந்துள்ள வங்கிக் கணக்கிற்கே குறித்த நிதி வரவு வைக்கப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.
இதனிடையே, ரிஜ்வே ஆரியா குழந்தைகள் மருத்துவமனைக்கு நன்கொடையாக CT ஸ்கேன் இயந்திரம் ஒன்றை வாங்குவதற்காக அரச வங்கி ஒன்றிடமிருந்து ஒரு கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளது.
அந்த நிதி குறித்த பணிக்காக பயன்படுத்தப்படாததால், அந்த நிதிக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஷிரந்தி ராஜபக்ச சுகயீனமுற்றுள்ள மருத்துவமனையில் இருப்பதால் இது தொடர்பான நிலைமைகள் குறித்த விசாரணைகள் பின்னர் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சிரிலிய சவிய கணக்கு தொடர்பில் பல கேள்விக்குரிய நிலைமைகள் காணப்படுகின்றது. அது குறித்தும் விசாரணைகள் நடைமுறையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கணக்கு தொடர்பாக கடந்த பெப்ரவரி 03ஆம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவு அவரிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
