காசாவில் ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், தொழில்நுட்ப தவறு தான் காரணம் என இஸ்ரேல் பாதுகாப்பு படை விளக்கம் அளித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் இடையே 2023 அக்டோபரில் போர் துவங்கியது.

இந்நிலையில் 21 மாதங்களாக நடந்து வரும் போரில், காசா பகுதியில் 58 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்து உள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் காசா பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் பொறுப்பை, காசா மனிதாபிமான அறக்கட்டளையிடம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா வழங்கியுள்ளன. இங்கு நாளொன்றுக்கு 5 சரக்கு லாரிகளில் நிவாரண பொருட்கள் வருகின்றன. அவற்றை பெறுவதற்கு தினமும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

இதனிடையே காசாவில் உதவி மையங்களை குறிவைத்து இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். நுசைரத் அகதிகள் முகாமில் தண்ணீர் விநியோக இடத்தில் இஸ்ரேல் படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 20 குழந்தைகள் உட்பட 34 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் சந்தை மற்றும் தண்ணீர் விநியோக இடத்தில் இருந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொழில்நுட்பக் கோளாறால் ஏற்பட்டதாகக் கூறிய இஸ்ரேல் ராணுவம், தற்போது இது குறித்து விசாரித்து வருகிறோம் என விளக்கம் அளித்துள்ளது.