யாழ்ப்பாணத்தில் 20 கிராம் ‘ஐஸ்’ ரக போதைப்பொருளுடன் இருவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் ஒருவரின் மகன் எனத் தெரியவந்துள்ளது.

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 25 மற்றும் 23 வயதுடைய இளைஞர்கள் ஆவர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் வன்முறைக் கும்பல்களுடன் தொடர்புடையவர் எனவும், அவரிடமிருந்து அபாயகரமான வாள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதான இவர்கள், குற்றத்தடுப்புப் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்துச் சம்பவத்தில் இருந்து தப்பிக்கவும் முயற்சி மேற்கொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.
சமீப நாட்களாக யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுடன் தொடர்புடைய 6 பேர் கடந்த சில தினங்களுக்குள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
