ஐஸ் போதைப்பொருளுடன் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிண்ணியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு முன்பாக, இன்று (12.06.2026) காலை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 3.2 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிவில் பாதுகாப்பு குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இன்று காலை திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர். இதன்போது, சந்தேக நபரை பரிசோதித்ததில் அவரிடமிருந்து இந்த போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் நடத்திய ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது, இவர் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கிண்ணியா குறிஞ்சாக்கேணி அரபா ஆண்கள் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவராவார்.
சந்தேக நபரை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த தேவையான ஏற்பாடுகளை கிண்ணியா போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
