ஐந்து கொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள்: முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்

மட்டக்களப்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகள் இருவரையும் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று (15) குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தனர்.

இதனையடுத்து நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் கடந்த ஏப்ரல் 7 ஆம் திகதி அவரது மட்டக்களப்பு அலுவலகத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், 2006 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து முக்கிய குற்றச் சம்பவங்கள் தொடர்பான தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவற்றில், கல்லடியில் கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், கப்பம் வழங்க மறுத்த வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டமை, கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாடுகளைத் தொடர்ந்து ரி.எம்.வி.பி உறுப்பினர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை மற்றும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அப்போதைய உபவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட சம்பவங்கள் அடங்குகின்றன.

இந்த வழக்குகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு காரணங்களால் பிள்ளையானை நீதிமன்றத்துக்கு நேரடியாக அழைத்துவர முடியவில்லை என குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்ததுடன், அவர் காணொளி (Zoom) தொழில்நுட்பத்தின் ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டார்.

மேலும், இந்த வழக்குடன் தொடர்புடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், பிள்ளையானின் நெருங்கிய உதவியாளரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான இனியபாரதி (கே. புஷ்பகுமார்) மீது ஏழு கொலைச் சம்பவங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பிள்ளையானை நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்படுவதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

srilankan airlines
சிட்னி நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம் மீது மின்னல் தாக்குதல்; 40 நிமிடங்களில் மீண்டும் கட்டுநாயக்கவில் தரையிறக்கம்!
Sangeetsan
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதான கலைஞர் சங்கீத்சனின் பிணை மனு மீதான உத்தரவு 23 இல்!
negombo protest
உயிர்த்த ஞாயிறு விசாரணைக்கு இடையூறு விளைவிக்காதே: நீர்கொழும்பில் அமைதிப் போராட்டம்!
srilanka weather
காங்கேசன்துறை - கற்பிட்டி கடற்பிராந்தியங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை: வளிமண்டலவியல் திணைக்களம்
yositha rajapaksha
கல்வித் தகுதி மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகளில் முறைகேடு: இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகிறார் யோஷித ராஜபக்ஷ!
சசி வீரவன்ச
சசி வீரவன்சவின் மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு: சிறைத்தண்டனை உறுதி!