கடல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கிய இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ‘P 4447’ அதிவேகத் தாக்குதல் ரோந்துப் படகு கடற்படையினரின் விசேட சுழியோடி மற்றும் மீட்பு நடவடிக்கை மூலம் வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 2026 ஆகஸ்ட் 15 ஆம் திகதி விபத்துக்குள்ளான இப் படகு, நீண்ட சிக்கலான மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு 2026 செப்டம்பர் 11 ஆம் திகதி மீட்டெடுக்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைகளுக்காகக் கொழும்பு கப்பல்துறை வளாகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15 ஆம் திகதி விபத்து நடந்த உடனடியாக, கடற்படை, விமானப்படை, பொலிஸ் மற்றும் அங்குலாணை பகுதி மீனவர்கள் இணைந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.
இச் சம்பவத்தின் போது படகிலிருந்த 11 பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். எனினும், காணாமல் போயிருந்த படகின் இரண்டாவது கட்டளை அதிகாரியின் சடலம் கடந்த செப்டம்பர் 04 ஆம் திகதி கடற்படையினரால் மீட்கப்பட்டது.
இறுதி கட்ட நடவடிக்கையாக, சீற்றமான கடல் அலைகள் மற்றும் நீருக்கடியிலான சவால்களுக்கு மத்தியில், சுமார் 80 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த படகு கடற்படைச் சுழியோடிகளால் படிப்படியாக மேற்பரப்பிற்குக் கொண்டுவரப்பட்டது.
இச் சிக்கலான மீட்புப் பணியில் கடற்படையின் கடல்சார் பொறியியல், மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் உள்ளிட்ட பிரிவுகளுடன் இணைந்து இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் கொழும்பு கப்பல்துறை தனியார் நிறுவனம் ஆகியவற்றின் தொழில்நுட்ப நிபுணத்துவமும் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
