பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை கைது செய்து, எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (29) பிடியாணை பிறப்பித்துள்ளது.

ஞானசார தேரருக்கு முன்னர் வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை உயர் நீதிமன்றம் செல்லுபடியற்றதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை அமுல்படுத்துமாறு சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான மாயாதுன்னே கொரயா மற்றும் லக்மாலி கருணாநாயக்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. அவருக்காக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, தமது கட்சிக்காரர் உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வெடுத்து வருவதாகவும், சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள மனுவை ஆராய்ந்து பதிலளிப்பதற்கு மேலதிக கால அவகாசம் வழங்குமாறும் கோரிக்கை விடுத்தார்.
எனினும், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி சஜித் பண்டார, இது குற்றவியல் வழக்கு என்பதால், குற்றஞ்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகாவிட்டால் அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்குமாறு கோரினார்.
இதையடுத்து, ஞானசார தேரரின் சட்டத்தரணி மனுவை ஆராய்வதற்கு மேலதிக கால அவகாசம் கோரியதைத் தொடர்ந்து, வழக்கு சிறிது நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஞானசார தேரரை கைது செய்வதற்கான பிடியாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்ததுடன், அவரை ஒக்டோபர் 1ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் உத்தரவிட்டது.
இதேவேளை, ஞானசார தேரருக்கு முன்னர் வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் செப்டம்பர் 10 ஆம் திகதி தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
