பிள்ளையான் என்று அழைக்கப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை தொடர்ந்தும் அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு கல்லடியில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை, காத்தான்குடியில் தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் கட்சி உறுப்பினர் உள்ளிட்ட இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்தமை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பிலேயே விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் எனக் கூறப்படும் முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகியோரும் அடங்குகின்றனர்.
இதேவேளை, இலண்டனில் இருப்பதாக தெரிவிக்கப்படும் முகமட் பாய்ஸ் என்ற காவல்துறை அதிகாரிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையும் தொடர்ந்து அமுலில் வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய விசாரணையின் போது முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், பிள்ளையான் காணொளி ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதனையடுத்து, பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
