தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்தும், அகற்றப்பட்ட சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவக் கோரியும் பிரித்தானியாவில் மாபெரும் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
லண்டனில் உள்ள பிரித்தானியப் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான 10 டவுனிங் வீதிக்கு (10 Downing Street) முன்பாகப் நேற்று 03.10.2026 பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டப் பேரணி, பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகம் (FCDO) வரை பேரணியாகச் சென்று முடிவடைந்தது.








தியாக தீபம் திலீபனின் நினைவை அவமதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவிப்பதுடன், ஈழத் தமிழர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் வரலாற்று நீதிக்கான கோரிக்கைகளைச் சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்தும் வகையிலும் இந்தப் போராட்டம் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
தமிழ் இளையோர் அமைப்பு (TYO), தமிழீழ சுயநிர்ணய அமைப்பு, தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளின் கூட்டு ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், புலம்பெயர் தமிழ் மக்கள், தேசிய உணர்வாளர்கள் மற்றும் இளைய தலைமுறையினர் பெருமளவில் கலந்துகொண்டு தமது கடும் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
போராட்டத்தின் போது, அகற்றப்பட்ட தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலையை எவ்வித நிபந்தனையுமின்றி அதே நினைவிடத்தில் உடனடியாக மீள நிறுவ வேண்டும் எனவும், தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமைகள் மற்றும் சுயநிர்ணய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டு வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
