பொலிஸ் நிலையத்திற்குள் தாக்குதல் நடத்தி மருத்துவ உதவி மறுக்கப்பட்டதா? இளைஞரின் மரணத்தால் எழுந்த சர்ச்சை!

ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், பொலிஸ் அதிகாரிகள் அவர் மீது தாக்குதல் நடத்தியதாக செயற்பாட்டாளர் வசந்த முதலிகே குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிரியவத்துடுவ பகுதியைச் சேர்ந்த இஷார ஹர்ஷ குமார என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். போதைப்பொருள் தொடர்பான விசாரணையின்போது அவர் கடந்த 25ஆம் திகதி கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹோமாகம பொலிஸ் நிலையத்திற்குள் குறித்த இளைஞர் தாக்கப்பட்டதாகவும், உறவினர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவருக்கு மருத்துவ உதவி வழங்குவதில் பொலிஸார் தாமதம் செய்ததாகவும் வசந்த முதலிகே குற்றஞ்சாட்டியுள்ளார்.

விசாரணையின் பின்னர் நடக்க முடியாத நிலையில் இருந்த இளைஞரை பொலிஸ் அதிகாரிகள் மீண்டும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு வெளிப்படையான காயங்கள் காணப்பட்டதாகவும், வாயிலிருந்து இரத்தம் வெளியேறியதாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

உறவினர்கள் பலமுறை கோரிக்கை விடுத்த பின்னரே இளைஞர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் கொண்டுசெல்லப்பட்டபோது ஏற்கனவே உயிரிழந்திருந்ததாகவும் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதற்கிடையில், குறித்த இளைஞருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் மற்றொரு இளைஞரின் நிலைமை குறித்தும் வசந்த முதலிகே கேள்வி எழுப்பியுள்ளார். அந்த இளைஞர் எங்கிருக்கிறார் என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

எனினும், இரண்டாவது நபர் காணாமல் ஆக்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை பொலிஸ் பேச்சாளர் நிராகரித்துள்ளார். அந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். பொலிஸ் காவலில் வைக்கப்படும் எந்தவொரு நபரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட வேண்டும் என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த அவர், சட்டவிரோதமாகச் செயற்பட்டதாகக் கண்டறியப்படும் எந்தவொரு பொலிஸ் அதிகாரிக்கும் எதிராகவும், அவர் வகிக்கும் பதவிநிலையைப் பொருட்படுத்தாமல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, காவலில் இருந்தபோது இளைஞருக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணை, ஹோமாகம உதவி பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இளைஞரின் மரணத்திற்கான காரணத்தையும் சம்பவத்தின் சூழ்நிலைகளையும் கண்டறிவதற்கான நீதவான் விசாரணையும் பிரேத பரிசோதனையும் இன்று 26ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த இளைஞரின் உறவினர்களும் பிரதேச மக்களும் சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts :

Special News :

Entertainment :

Special News

CycloneArnab
சீரற்ற காலநிலை: இந்தியப் பிராந்தியக் கடலுக்குள் பிரவேசிக்க இலங்கை படகுகளுக்கு அனுமதி
CycloneArnab
அர்னாப் புயல் மிகத் தீவிரப் புயலாக வலுப்பெற்றது: வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை!
CustodialDeath
பொலிஸ் நிலையத்திற்குள் தாக்குதல் நடத்தி மருத்துவ உதவி மறுக்கப்பட்டதா? இளைஞரின் மரணத்தால் எழுந்த சர்ச்சை!
ArnabCyclone
வலுவடையும் 'அர்னாப்' சூறாவளி: நாட்டின் பல பகுதிகளில் மழை அதிகரிக்கும் என அறிவிப்பு!
KeheliyaRambukwella
தரமற்ற மருந்து வழக்கு: முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட நால்வரை பிணையில் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
AccidentNews
டிப்பர் - பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து: ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதி!