வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய பகுதியில் நிலைகொண்டுள்ள ‘அர்னாப் புயல், மேலும் வலுப்பெற்று மிகத் தீவிரப் புயலாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று (27) அதிகாலை 2.30 அளவில், காங்கேசன்துறைக்கு வடகிழக்கே சுமார் 890 கிலோமீற்றர் தொலைவில், வடக்கு அட்சரேகை 15.9 பாகை மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 85.4 பாகை பகுதியில் இந்த புயல் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல் இன்று மாலை 5.30 வரை மேற்கு மற்றும் வடமேற்கு திசைகளை நோக்கி நகரக்கூடும் எனவும், நாளை (28) முற்பகல் 11.30 அளவில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
புயலின் தாக்கத்தால் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 80 முதல் 140 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
அத்துடன், இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
குறித்த கடல் பகுதிகளில் அலைகள் சுமார் 3 முதல் 4 மீற்றர் வரை உயரக்கூடும் என்பதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு முதல் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, பொத்துவில், மட்டக்களப்பு ஊடாக முல்லைத்தீவு வரையான ஆழ்கடல் மற்றும் ஆழம் குறைந்த கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 முதல் 65 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
மேலும், புத்தளம் முதல் கொழும்பு, காலி, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடலோரப் பகுதிகளில் அலைகள் சுமார் 2 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு அட்சரேகை 10 முதல் 20 பாகை வரையிலும், கிழக்கு தீர்க்கரேகை 80 முதல் 95 பாகை வரையிலுமான கடல் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை குறித்த கடல் பகுதிகளில் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்பயண நடவடிக்கைகளை முற்றாகத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், தற்போது அந்தக் கடல் பகுதிகளில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் மற்றும் கடற்பயணிகள் உடனடியாகப் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
