சவூதி அரேபிய உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையில், மரண தண்டனை இரத்து செய்யப்பட்டு வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், தம்மாம் மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனோஜன் சிவராசாவைச் சந்திப்பதற்காக சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வாட் நேற்று (26) சிறைச்சாலைக்குச் சென்றுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, எதிர்வரும் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் அனோஜன் சிவராசாவுக்கு விளக்கமளிக்கப்பட்டதுடன், அவருக்குத் தேவையான சட்ட மற்றும் தூதரக உதவிகளை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபிய நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் சட்ட நடைமுறைகளுக்கும் முழுமையான மதிப்பளித்து, எதிர்வரும் வழக்கு விசாரணைகளின்போது சிவராசா, அவரது சட்டத்தரணிகள் குழு மற்றும் ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் ஆகியவற்றுக்கு இடையில் நெருங்கிய ஒருங்கிணைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தைத் தூதுவர் அமீர் அஜ்வாட் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சிவராசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அவரது நலனில் அக்கறை செலுத்தியமைக்கும், இலங்கைத் தூதரகத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியமைக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்குத் தூதுவர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
