ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையத்தை விற்பனை செய்வதற்கு எதிராக 2017 ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட 41 பேருக்கு எதிராக இன்று (16) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அனைத்துப் பிரதிவாதிகளையும் தலா 10,000 ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 5 இலட்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பிணைகளிலும் செல்வதற்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்ற நீதிபதி துமிந்த முதுன்கொட்டுவ உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், அனைத்துப் பிரதிவாதிகளின் வெளிநாட்டுப் பயணங்களைத் தடைசெய்தும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கின் 35 ஆவது பிரதிவாதியான, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வேறொரு வழக்கு விசாரணைக்காக இன்று முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமையால், அவரை ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் நேரடியாக முன்னிலைப்படுத்த முடியவில்லை எனச் சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
