பிரான்ஸின் வால்-துவாஸ் (Val-d’Oise) பகுதியில் வசித்து வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 51 வயதுடைய தமிழ் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நவம்பர் 9ஆம் திகதி முதல் காணாமல் போயிருந்த குறித்த பெண், அன்றைய தினம் கார் ஒன்றைக் கொள்வனவு செய்வது தொடர்பாக பாரிஸின் புறநகர்ப் பகுதியான லா கோர்னுவ் (La Courneuve) நகரில் உள்ள வாகனத் திருத்தகம் ஒன்றுக்குச் சென்றிருந்ததாக அவரது பிள்ளைகள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது, அவரது கையடக்கத் தொலைபேசியின் இறுதி இருப்பிடச் சமிக்ஞை லா கோர்னுவ், பிரிதொரு முகவரியில் உள்ள வாகனத் திருத்தகத்தைக் காட்டியுள்ளது.
இதன்பேரில், நவம்பர் 14ஆம் திகதி இரவு பிரான்ஸ் காவல்துறையினர் குறித்த வாகனத் திருத்தகத்தில் சோதனை நடத்தியுள்ளனர்.
இதன்போது, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Volkswagen Caddy ரக வாகனத்தின் பின்பகுதியில் தார்ப்பாயால் சுற்றப்பட்ட நிலையில் பெண்ணின் உடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் வாகனத் திருத்தகத்தின் உரிமையாளர், அவரது மனைவி மற்றும் குறித்த வாகனத்தின் உரிமையாளர் ஆகிய மூவர் ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், பொபிக்னி அரச தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் கடந்த நவம்பர் 18ஆம் திகதி வெளியிட்ட தகவலின்படி, வாகனத் திருத்தகத்தின் உரிமையாளர் மீது திட்டமிட்ட கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அவர் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பிரான்ஸ் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
