எம்பிலாபிட்டிய, கிரலவெல்கடுவ பகுதியில் குடும்பத் தகராறு காரணமாகப் பெற்ற தாய் மற்றும் தந்தையை 26 வயதுடைய மகன் ஒருவரால் கோடாரியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சிச் சம்பவம் பிராந்தியத்தில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இக்கொடூர வன்முறைச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய தந்தை மற்றும் 54 வயதுடைய தாய் ஆகிய இருவருமே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு தம்பதியினருக்கும் அவர்களது மகனுக்கும் இடையே ஏற்பட்ட நீண்ட தனிப்பட்ட தகராறு ஒன்று, நள்ளிரவில் கடுமையான வாக்குவாதமாக மாறியுள்ளது. இந்த வாக்குவாதம் எல்லை மீறிச் சென்ற நிலையில், ஆத்திரமடைந்த மகன் வீட்டில் இருந்த கூர்மையான கோடாரியை எடுத்துத் தனது பெற்றோரைக் கொடூரமான முறையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த வெட்டுக் காயங்களுக்கு உள்ளான தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், படுகாயமடைந்த தாய் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த எம்பிலாபிட்டிய பொலிஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இரட்டைக் கொலையைச் செய்த 26 வயதுடைய சந்தேக நபரான மகனைக் கைது செய்துள்ளனர். கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், எம்பிலாபிட்டிய பொலிஸார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் இணைந்து இக்கோரச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
