முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட நிதி மோசடி தொடர்பான வழக்கை நிறைவு செய்வதற்காக கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இன்று (9) அறிவித்துள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, கொழும்பு மேல் நீதிமன்றில் இது தொடர்பான வழக்கை தொடர்ந்துள்ளதால், கொழும்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை நிறைவுக்கு கொண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, பிரதிவாதிகள் பொருத்தமான திகதிகளில் கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
இதன்போது நீதவான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள், குறித்த பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு நடவடிக்கைகளை நிறைவுறுத்த முடியும் என தெரிவித்தனர்.
அதன்படி, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் தொடரப்பட்ட குறித்த வழக்கின் நடவடிக்கைகளை நிறைவுறுத்த முடிவு செய்த பிரதான நீதவான், பிரதிவாதிகள் பொருத்தமான திகதிகளில் மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.