டிட்வா சூறாவளியால் காணாமல் போன வெளிநாட்டவர்களுக்கும் மரண சான்றிதழை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் இற்றைப்படுத்தப்பட்ட சுற்றறிக்கையும் வெளியிட்டுள்ளதாக எமது செய்தி சேவைக்கு அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, காணாமல் போன வெளிநாட்டவர்கள் தொடர்பில் அவர்களுடைய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கொன்சூலர் நாயகம் அலுவலகம் மற்றும் தூதுவர்கள் ஊடாக, பதிவாளர் நாயகத்துக்கு நேரடியாக விண்ணப்பிக்க முடியும்
அந்த விண்ணப்பம் தொடர்பில் பதிவாளர் நாயகத்தினால் விடயங்கள் ஆராயப்பட்டு, தகவல் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் காணாமல் போன வெளிநாட்டவர்களுக்கான மரணச் சான்றிதழ் விநியோகிக்கப்படும் என பதிவாளர் நாயகம் குறிப்பிட்டார்.
டிட்வா சூறாவளியின் பின்னர் பேரிடர் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள, 22 மாவட்டங்களில் தங்கி இருந்த வெளிநாட்டவர்களுக்கு மாத்திரமே இந்த நடவடிக்கை பொருந்தும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அதன்படி காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களைத் தவிர்ந்த நாட்டின் ஏனைய 22 மாவட்டங்களிலும் தங்கி இருந்த வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு இந்த நடைமுறை அமுலாக்கப்படும் என பதிவாளர் நாயக திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
