ஃப்ளைதுபாய் விமானத்தின் கேப்டன் ஸ்மித் மச்சரைத் தாக்கிய துணை விமானி, விமானத்தை மோதச் செய்ய விரும்பியதாகவும், மரணத்திற்கு அஞ்சவில்லை என்றும் சவுதி அரேபிய அதிகாரிகளிடம் தெரிவித்ததாக, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து அறிந்த அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி தி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

தாக்குதலைத் தொடர்ந்து சவுதி அரேபியாவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்து திரும்ப அழைத்து வரப்பட்ட 29 வயதான ஓமன் நாட்டவரான ஹமாம் அல்-ஹம்மாமி என்ற துணை விமானி, தற்போது ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
இந்த துணை விமானி பயங்கரவாதச் செயலை மேற்கொள்ள முயன்றதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை வழக்கறிஞர் சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். ஹம்மாமிக்கு வேறு ஏதேனும் அமைப்புகள் அல்லது சக்திகளுடன் தொடர்பு இருந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் கட்டுப்பாட்டை கைப்பற்ற முயற்சிப்பதற்கு முன்னர், விமானத்தில் இருந்த கோடரியைக் கொண்டு ஹம்மாமி கேப்டனை பலமுறை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்போது, கேப்டன் விமானி அறையின் கதவைத் திறந்ததையடுத்து, பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் தலையிட்டு தாக்குதலைத் தடுத்ததாக கூறப்படுகிறது. தாக்குதல் இடம்பெற்றபோது விமானத்தில் 170க்கும் மேற்பட்டோர் பயணித்துக் கொண்டிருந்தனர்.
ஓமன் நாட்டைச் சேர்ந்த தந்தைக்கும் சிரியாவைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்த ஹம்மாமி, பல ஆண்டுகளாக துபாயில் வசித்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் இடம்பெற்ற நீண்டகால உள்நாட்டுப் போரின்போதும் அவர் அங்கு சில காலம் வசித்துள்ளார்.
அவர் சிரியாவில் இருந்த காலத்தில் தீவிரவாத சிந்தனைகளைப் பெற்றாரா என்பது தொடர்பிலும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் மேற்கோளிட்டுள்ள விசாரணை தொடர்பில் அறிந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அவரது இணையதளச் செயற்பாடுகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
அவர் நீக்கப்பட்ட எக்ஸ் (X) கணக்கில் பதிவிட்டிருந்த 3,000க்கும் மேற்பட்ட பதிவுகளின் திரைப்பிடிப்புகள் இணைய ஆவணக்காப்பகங்களில் இன்னும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில் பல பதிவுகள், பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு எதிரான கருத்துகளையும், முக்காடு அணியும் மதப்பற்றுள்ள பெண்களுக்கு ஆதரவான கருத்துகளையும் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
